வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல்முறை என கூறப்படும் நிலையில், சூப்பர் எல் நினோ வரும் நவம்பர் மாதத்தில் வரலாற்று இல்லாத அளவுக்கு 3.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் தீவிரமடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பல காலநிலை மாற்றங்கள் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.
பருவநிலை மாற்றம் கடந்த சில ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது. வெப்பம் அதிகரிப்பது, பருவமழை தாமதம், சில பகுதிகளில் மிக அதிக கன மழை போன்ற காலநிலை மாற்றங்கள் உலக அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் எல் நினோ எனப்படும் நிகழ்வு. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் இயற்கையான ஒரு நிகழ்வு தான் எல் நினோ எனப்படுகிறது.
ஆனால் இந்த முறை அந்த வெப்பநிலை உயர்வு மிக வேகமாகவும் அதிக அளவிலும் பதிவாகி இருக்கிறது. பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து இருப்பதால் இந்த முறை உருவாகியுள்ள எல் நினோ கடந்த 1997 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உலகை பாதித்த வலுவான எல் நினோ நிகழ்வுகளை மிஞ்சக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட DWM சூப்பர் எல் நினோ மானிட்டரிங் அப்டேட் இதனை உறுதி செய்துள்ளது. நினோ 3.4 எனப்படும் முக்கிய கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு நீண்டகால சராசரியை விட இரண்டு செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை சாதாரண எல் நினோ என இல்லாமல் சூப்பர் எல் நினோ என்ற நிலைக்கு மாற்றி உள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு PALA காரணங்கள் ஒன்றாக இணைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். கடந்த சில வாரங்களாக பசிபிக் பெருங்கடலில் தொடர்ந்து வீசிய Westerly Wind Bursts எனும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் பலத்த காற்றோட்டம், சின்ளக்கு, பவி, டால்பின் ஆகிய சக்தி வாய்ந்த சூறாவளிகளின் தாக்கம் மற்றும் கடலுக்கு அடியில் வெப்பத்தை வேகமாக உருவாக்கும் கெல்வில் வேவ் ஆகியவை ஒன்றாக இணைந்து கடல் நீரின் வெப்பநிலையை கணிசமாக உயர்த்தி உள்ளன. இதுதான் எல் நினோவை சூப்பர் எல் நினோவாக மாற்றி இருக்கிறது. இதற்கு முன்பு 1982, 1997, 2015 ஆம் ஆண்டுகளில் உலகை அதிகம் பாதித்த எல் நினோ நிகழ்வுகள் பதிவாகின. ஆனால் இந்த ஆண்டின் தொடக்க நிலையிலேயே வெப்பநிலை உயர்வு கடந்த ஆண்டுகளை விட அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பதிவான வெப்பநிலை முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக உயர்ந்திருப்பதால் 2026 ஆம் ஆண்டு எல் நினோ வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக மாறும் வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதே நேரத்தில் தற்போதைக்கு இது ஆரம்பகட்ட நிலையில் உள்ள நிகழ்வு என்பதால் அடுத்த சில மாதங்களில் தான் இதன் தீவிரம் மேலும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது தெரியவரும். தற்போதைய கணிப்புகளின் படி இந்த சூப்பர் எலினோ நவம்பர் மாதத்தில் உச்சகட்டத்தை எட்ட கூடும் எனவும் அப்போது நினோ 3.4 பகுதியில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அதே நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை சூறாவளி தீவிரமாக இருக்கும் காலம் என்பதால் புதிதாக உருவாகும் சக்தி வாய்ந்த சூறாவளிகள் இந்த எல் நினோ மேலும் தீவிரப்படுத்தலாம் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கின்றனர். கடலில் மட்டுமல்ல வளிமண்டலத்திலும் எல் நினோவின் தாக்கம் தெளிவாக தெரிய தொடங்கியுள்ளதாக சொல்லும் ஆய்வாளர்கள்,சதன் ஆக்சிலேசன் இன்டெக்ஸ் தொடர்ந்து மிகவும் குறைந்த அளவில் பதிவாகி வருவது கடல் மற்றும் வளிமண்டலம் இரண்டும் ஒரே மாதிரியாக செயல்பட தொடங்கியதற்க்கான முக்கிய அறிகுறியாக பார்க்கின்றனர். இதனால் உலக அளவில் வானிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். இந்த சூப்பர் எல் நினோவின் தாக்கம் பசிபிக் பெருங்கடல் மட்டுமல்லாது இந்திய பெருங்கடலிலும் எதிரொலிக்கும் என்றும், வானிலை ஆய்வாளர்கள் சொல்கின்றார். குறிப்பாக பாசிட்டிவ் இந்தியன் ஓசன் டைபோல் உருவாகும் வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும், இது ஆசிய நாடுகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ பருவமலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சில மாநிலங்களில் வறட்சி, சில மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை, வெப்ப அலைகள், கடல் வெப்பநிலை உயர்வு, விவசாயம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? மழை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்பது குறித்து தற்போது எந்த வித அதிகாரப்பூர்வ முடிவுகளும் வரவில்லை. அதற்கான முன்னறிவிப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியிடும் கணிப்புகளின் அடிப்படையில் தான் உறுதியாக சொல்ல முடியும். எனவே, 2026-ம் ஆண்டின் சூப்பர் எல் நினோ உலக வானிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து வரும் காலங்களில் வெளியாகும் அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைகளே தெளிவாகச் சொல்லும். தற்போது உலக வானிலை ஆய்வாளர்களும், காலநிலை ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வை தொடர்ந்து மிக நெருக்கமாக கண்காணித்து வரும் நிலையில், ஏதோ ஒன்று நடக்கப்போவது உறுதி என்கின்றனர்.