லாஸ் ஏஞ்சல்ஸை ஆளப்போகும் தமிழ் ஏஞ்சல்! யார் இந்த நித்யா ராமன்? அமெரிக்க தேர்தலில் செம ட்விஸ்ட்!

  • வாஷிங்டன்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியான நித்யா ராமன் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் ஆசிய அமெரிக்க மேயர் என்கிற வரலாற்று சாதனையை நித்யா ராமன் படைக்க உள்ளார்.

    Advertisement

    டெசிஷன் டெஸ்க் ஹெச்கியூ (Decision Desk HQ) என்ற தேர்தல் கணிப்பு அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய மேயராக இருக்கும் கரேன் பாஸை தோற்கடித்து நித்யா ராமன் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    சாதகமாக மாறிய வாக்குகள்

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிலவும் வீட்டு வசதி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ,பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட தயாரிப்பு துறை வேறு இடங்களுக்கு இடம் மாறியது மற்றும் சமீபத்திய காட்டு தீ பாதிப்புகளை இதற்கு முன்னர் இருந்த மேயர் 'கரேன்' கையாண்ட விதம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே, அவர் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த அதிருப்தி தற்போது நித்யா ராமனுக்கு ஆதரவாக மாறியிருக்கிறது.

    வெற்றி உறுதி

    கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, முதல் கட்ட வாக்குகள் எண்ணப்பட்டபோது.. கரேன் முன்னிலையில் இருந்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் நித்யா ராமன் தொடர்ந்து முன்னேறி.. இறுதியில், குறுகிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தற்போது வரை 75% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. நித்யா ராமன் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், இவரது வெற்றியை Decision Desk உறுதி செய்துள்ளது. தபால் வாக்குகள் அடுத்த வாரம் தொடக்கம் வரை வர வாய்ப்புள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம்.

    Advertisement

    இடதுசாரி சிந்தனை

    உள்ளூர் கட்சி அரசியல் கட்டமைப்புக்கு எதிராக, வெளியிலிருந்து களம் இறங்கிய இடதுசாரி சிந்தனை கொண்ட மாமன்ற உறுப்பினரான நித்யா ராமனின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்தின் முற்போக்கு இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் இளம் வாக்காளர்கள், இவருக்கு பெருமளவில் ஆதரவளித்துள்ளனர்.

    நித்யா ராமனின் பின்னணி

    கடந்த 1981 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த நித்யா ராமன், தனது 6 வயதில் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். இவர் தனது 22 வயதில் அமெரிக்க குடியுரிமையை பெற்றார். ஹார்வர்டு மற்றும் எம்ஐடி பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர், நகர்ப்புற திட்டமிடல் நிபுணராக உருவெடுத்தார். மேயர் ஆவதற்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் வீடற்றவர்களுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவினார். மேலும் பணி இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக செயல்படும், 'டைம்ஸ் அப்' என்ற புகழ்பெற்ற அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக நகராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார்.

    Advertisement

    வெற்றிப்பெற்றால் பெரிய பொறுப்பு இருக்கிறது

    இவரது தேர்தல் பிரச்சாரத்தில் ஹாலிவுட் திரையுலகின் குறிப்பாக, தொலைக்காட்சி நகைச்சுவை துறையினரின் பலத்த ஆதரவு இருந்தது. இவருடைய வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் பட்சத்தில்.. வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளை, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் நடத்த தயாராகி வரும் வேளையில்.. இந்த பிரம்மாண்ட நகரை வழிநடத்தும் முக்கிய பொறுப்பு நித்யா ராமனுக்கு கிடைக்கும்.

    தமிழ் பேசும் ஏஞ்சல்

    இவர் பிறப்பால் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், இவரது குடும்பம் தமிழ் வழியை சேர்ந்ததாகும். அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இவர் வளர்ந்த போது.. வீட்டில் தமிழ் மொழியிலேயே பேசி வளர்ந்துள்ளார். இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவெனில், அவர் தனது கல்லூரி படிப்பை ஹார்வர்டில் முடித்தார். அங்கு அவர் சமர்ப்பித்த இளங்கலை ஆய்வு ஆய்வறிக்கையே, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளைப் பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தனது பெற்றோருடன் தற்போதும் தமிழ் தான் அவர் பேசுவதாகவும், தங்களது குழந்தைகள் கூட தமிழ் மொழியை புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். கேரளாவில் பிறந்தவராக இருந்தாலும் தற்போது தமக்கு மலையாளம் சரளமாக வராது என்றும் அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தமிழ் பேசும் ஏஞ்சல் ஆள இருக்கிறார்.

    English Summary

    Tamil Angel Set to Rule Los Angeles: Polls indicate that Nithya Raman, who is of Indian origin, has a strong chance of winning the Los Angeles mayoral election. Should she win, Nithya Raman would achieve a historic milestone by becoming the first Asian American mayor of Los Angeles.