வாஷிங்டன்: ''ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் பின்விளைவுகள் உண்டு. பாகிஸ்தான் பகலில் பாதுகாப்பை நிலைநாட்டுவதாக கூறி கொண்டு இரவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகிறது. பயங்கரவாதிகள் ஓடவோ, ஒளிந்துகொள்ளவோ இடமில்லை என்பதை கடந்த ஆண்டு நாங்கள் நிரூபித்தோம்'' என்று ஐநா பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா பதிலடி கொடுத்ததோடு, பாகிஸ்தானின் நயவஞ்சக செயலை இந்திய தூதர் பெதல் கெலாட் கிழித்து தொங்கவிட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பொதுச்சபை உள்ளது. தற்போது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரை நிகழ்த்தினார். ஷெபாஸ் ஷெரீப் மொத்தம் 23 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது காஷ்மீர் பிரச்சனையை கிளறினார். இதுபற்றி அவர் ''தெற்காசியா மீண்டும் 2025ம் ஆண்டு போன்ற மோதல் எனும் படுகுழியை அடையாமல் உறுதி செய்ய வேண்டும். இதற்கு காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நேர்மையான தீர்வு தேவையாக உள்ளது. இருஅணுஆயுதம் கொண்ட நாடுகள் (இந்தியா - பாகிஸ்தான்) இடையே கடந்த 2025ம் ஆண்டு நடந்த மோதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சரியான நேரத்தில் தலையீடு செய்ததற்கு பாராட்டுகள்'' என்றார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உரைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதுதொடர்பாக ஐநாவில் இந்திய தூதரகத்தை சேர்ந்த பெதல் கெலாட் பேசினார்.இவர் இந்திய தூதரக அதிகாரி ஆவார். தற்போது நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபையில் இந்தியாவின் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கூறியதாவது: ''பயங்கரவாதம் பற்றிய பாகிஸ்தானின் கருத்துகள் விசித்திரமானவை. அமெரிக்கா சமீபத்தில் 9/11 தாக்குதல்களின் நினைவு நாளை அனுசரித்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானிலேயே வசித்து வந்தார். பாகிஸ்தான் இராணுவத்தின் முதன்மை அகாடமியின் வாசலிலேயே வசித்து வந்தார். பாகிஸ்தான் பகலில் பாதுகாப்பை நிலைநாட்டுவதாக கூறி கொண்டு இரவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகிறது. பயங்கரவாதிகள் ஓடவோ, ஒளிந்துகொள்ளவோ இடமில்லை என்பதை கடந்த ஆண்டு நாங்கள் நிரூபித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான பயங்கரவாத செயல்களுக்கு உரிய முறையில் பின்விளைவுகள் இருக்கும். பாகிஸ்தானையும், அதன் கொள்கைகளையும் அந்த நாட்டின் பிரதிநிதிகள் சபையில் தவறாக முன்வைக்கின்றனர். இதனால் உண்மையான நிலையை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொய்யை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறுவதால் அது உண்மையாகி விடாது. பாகிஸ்தானின் இரட்டை வேடமும், அந்த நாட்டின் வஞ்சக செயலிலும் உலகிற்கு ஒருபோதும் பயனளிக்காது. ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகும். அதனை யாராலும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பக்கம் நம்முடைய கவனத்தை திருப்ப வேண்டி உள்ளது. ராவல்கோட் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்)மக்களிடம் பாகிஸ்தான் நகிழ்த்தும் கண்மூடித்தனமான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி கேட்க வேண்டும். பாகிஸ்தான் என்பது ராணுவத்தின் ஆட்சி. ராணுவத்திற்கான ஆட்சியாளர்களாக உள்ளனர்'' என்று காட்டமாக கிழித்து எறிந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது.'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானை பந்தாடியத. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளம், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் நம்மிடம் பணிந்ததால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்த மோதலை நான் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஐநா பொதுச்சபை உரையிலும்கூறினார். டிரம்ப்பின் தலையீட்டை இந்தியா ஏற்காமல் உள்ள நிலையில் அதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.