வாஷிங்டன்: அமெரிக்காவில் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர், தங்களது குடியுரிமை அல்லது குடியேற்ற நிலைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பலரும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை இருக்கிறது. அதாவது பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை இல்லை என்றாலும் கூட குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் அந்த குழந்தைக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வந்துவிடும் என்பதே அந்த விதியாகும். இதற்கு டிரம்ப் தடை விதிக்க முயன்ற நிலையில், நீதிமன்றம் டிரம்ப் உத்தரவை ரத்து செய்துவிட்டது.
இருப்பினும், எப்படியாவது இதில் கெடுபிடிகளை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முயன்று வருகிறது. அதன்படி இப்போது குழந்தைகளுக்கு அமெரிக்க பாஸ்போர்ட் பெற விரும்பி விண்ணப்பிக்கும் பெற்றோர், தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்தை நிச்சயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது போல புதிய விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை வழங்கும் நடைமுறையை கட்டுப்படுத்தும் டிரம்பின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, பெற்றோர் குழந்தையுடனான தங்களது உறவை நிரூபிக்க வேண்டும். மேலும் அரசு வழங்கிய புகைப்பட அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்தாலே போதும். விண்ணப்பப் படிவங்களில் பெற்றோரின் குடியுரிமை நிலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டாலும், அதை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால் புதிய வரைவு வழிகாட்டுதலின்படி, குழந்தையின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலைக்கான ஆதாரங்களை அதிகாரிகள் கேட்பார்கள். குடியுரிமை இருந்தால் பாஸ்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும்.. குடியுரிமை இல்லாதவர்கள் சட்டப்பூர்வமாகவே அமெரிக்காவில் தங்கியுள்ளனர் என்பதை நிரூபிக்கும் I-94 படிவம் அல்லது நிரந்தர குடியிருப்பு அட்டை போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இந்த தகவல்களை வைத்து அந்த குழந்தை அமெரிக்க குடியுரிமை பெற தகுதியுள்ளதா என்பது தீர்மானிக்கப்படும். குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் டிரம்பின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக பிறப்புரிமை குடியுரிமை இருக்கிறது. குழந்தைக்கு குடியுரிமை பெற பலரும் சட்டவிரோதமாகவும் அமெரிக்காவில் நுழைகிறார்கள் என்பதே டிரம்பின் வாதமாகும் இதை தடுக்க முன்பு பெற்றோரில் குறைந்தது ஒருவர் அமெரிக்க குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருக்கும் நபராக இருக்க வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், டிரம்பின் இந்த உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. டிரம்பின் இந்த உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தில் உள்ள குடியுரிமை விதியை மீறுவதாக சொல்லி அதை ரத்து செய்துவிட்டது. வெளிநாட்டினர் அதிகளவில் அமெரிக்காவுக்கு வருவதால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே டிரம்பின் முக்கிய வாதமாக இருக்கிறது. இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதை கட்டுப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் அரசு இறங்கியுள்ளது. சட்டவிரோத குடியேற்றம் மட்டுமின்றி, சட்டப்பூர்வ விசா பெற்று அமெரிக்கா வருவோரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..டிரம்ப் அரசு
தற்போதைய நடைமுறை என்ன?
பிறப்புரிமை குடியுரிமை
டிரம்ப் வாதம்