சவுதி மூலம் ஈரானுக்கு டிரம்ப் வைக்கும் செக்.. யுரேனியம் செறிவூட்ட அனுமதி! உலக நாடுகள் கவலை

  • வாஷிங்டன்: சவுதி அரேபியாவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தை செறிவூட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் புதிய அணு ஆயுத போட்டி உருவாகும் அபாயம் குறித்து சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    அமெரிக்காவின் டிரம்ப் அரசு மத்திய கிழக்கை தனது கண்ட்ரோலில் வைத்திருக்க விரும்புகிறது. இதன் காரணமாகவே அங்கு சவுதி அரேபியா உடன் அமெரிக்கா தொடர்ச்சியான நல்லுறவை கடைப்பிடித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் சவுதி அரேபியா உடனான முக்கியமான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளாராம்.

    Advertisement

    சவுதி உடன் டீல்

    இது தொடர்பான தகவல்களை பிரபல அமெரிக்க ஊடகமான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தத்தை அடுத்த சில நாட்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, சவுதி அரேபியாவின் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும். இதன் மூலம் பிற நாடுகளின் நிறுவனங்களுக்கு வாய்ப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் கையெழுத்திட்டுள்ள '123 ஒப்பந்தம்' என்ற முக்கியமான இந்த அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    Advertisement

    பாதுகாப்பு விதிமுறைகள் இல்லை

    இதுவரை அமெரிக்கா பிற நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தங்களில், அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் இடம்பெற்றிருக்கும். சவுதி உடனான டீலிலும் இது தொடர்பாக சில பாயிண்டுகள் இருந்தாலும் கூட வழக்கமாக இருக்கும் அளவுக்கு கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    மிக பெரிய கேள்வி

    மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியா தனது நாட்டிலேயே யுரேனியத்தை செறிவூட்ட அனுமதிக்கப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் அணு ஆயுத தயாரிப்புக்கான தொழில்நுட்ப திறனையும் அது பெறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஈரான் இப்போது யுரேனியத்தை செறிவூட்டுவதாலேயே அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்கா சவுதி இடையே நல்லுறவு இருந்தாலும் கூட அவர்கள் நாட்டிலேயே யுரேனியத்தை செறிவூட்ட அனுமதிப்பது சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    ஏற்கனவே சவுதி ஈரான் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரான் அணு ஆயுதம் உருவாக்கினால், சவுதி அரேபியாவும் தனது சொந்த அணு ஆயுதத்தை உருவாக்கும் என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்கனவே வெளிப்படையாக கூறியிருந்தார். இந்தச் சூழலில் இறுதியாகியுள்ள இந்த புதிய ஒப்பந்தம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கட்டாயம் இல்லை

    மேலும், இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு பாயிண்டு என்னவென்றால்.. இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூடுதல் கண்காணிப்பு நடைமுறையை சவுதி அரேபியா ஏற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதற்கு பதிலாக, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையேயான இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால், அணுசக்தி திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச கண்காணிப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இந்த ஒப்பந்தம் வரும் நாட்களில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    English Summary

    US President Donald Trump has reportedly approved a landmark nuclear agreement with Saudi Arabia(அமெரிக்கா சவுதி இடையே இறுதியான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்): US Saudi Nuclear Deal latest news in tamil.