யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்!

  • வாஷிங்டன்: ஈரானிடம் அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, செறிவூட்டப்பட்ட யூரேனியம்தான். அதை வைத்து ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என அமெரிக்கா பயப்படுகிறது. சரி இந்த யுரேனியத்தை கொடுத்துவிட்டால் பிரச்சனை முடிந்துவிடுமா? என்று கேட்டால் இல்லை. யுரேனியம் கிடைத்தாலும் கூட ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க மாட்டோம் என்று டிரம்ப் கறாராக கூறியிருக்கிறார்.

    Advertisement

    மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் பதற்றமான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைக்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வரும் பின்னணியில் ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    Advertisement

    ஊடக நிறுவனமான 'பிபிஎஸ் நியூஸ்' நடத்திய தொலைபேசி நேர்காணலின் போது, “தற்போது பேசப்பட்டு வரும் அமைதி உடன்படிக்கையின்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், அதற்குப் பகரமாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுமா?” என்று ட்ரம்பிடம் கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், “இல்லை, இல்லவே இல்லை. பொருளாதாரத் தடைகளில் எந்தத் தளர்வும் கிடையாது. அவர்கள் தங்களது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கப் போகிறார்கள்; ஆனால் அதற்காகப் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது” என்று கூறியுள்ளார்.

    இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரைவு அமைதித் திட்டம் குறித்துப் பேசப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'ஹார்முஸ் ஜலசந்தி' வழியிலான வணிகக் கப்பல் போக்குவரத்தைப் போருக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு வர ஈரான் விரும்புகிறது. அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையையும், ராணுவக் குவிப்பையும் குறைக்க வேண்டும் என்பது ஈரானின் கோரிக்கை.

    Advertisement

    வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “ஈரான் உடன்படிக்கைக்கு வர மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தற்போதைய பேச்சுவார்த்தை நிலவரத்தில் எங்களுக்குத் திருப்தி இல்லை. ஒன்று எங்களின் நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும், இல்லையெனில் நாங்கள் இந்த வேலையை முடிக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

    சர்வதேச அணுசக்தி முகமையின் கணக்குப்படி, ஈரான் தற்போது ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு மிக நெருக்கமான 60% தூய்மையுடைய 440.9 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவசம் வைத்துள்ளது.

    Advertisement

    இதனை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. ஆனால், பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டால் மட்டுமே அணுசக்தி விவகாரங்களில் சமரசம் செய்ய முடியும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளதால், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

    Topics: #trump #iran #us

    English Summary

    The only issue the United States has with Iran is enriched uranium. The U.S. fears that Iran is using it to manufacture nuclear weapons. If one were to ask, "Would the problem be resolved if this uranium were handed over?"—the answer is no. Trump has categorically stated that even if the uranium is surrendered, the economic sanctions against Iran will not be lifted.