ஈரான் சொன்ன வார்த்தை.. உடனடியாக தாக்குதலை நிறுத்திய டிரம்ப்.. இரவோடு இரவாக மாற்றம்.. என்ன நடந்தது

  • வாஷிங்டன்: ஈரான் மீது மிக பெரிய ராணுவ தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருந்த போதிலும், ஈரான் மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று அந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறப்பது மற்றும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில நாட்களாகவே மீண்டும் மோதல் போக்கு உருவானது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலை வரை ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது. ஈரானின் ராணுவ இலக்குகளை காலி செய்யும் வகையிலேயே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி வந்தது. ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளில் கிட்டத்தட்ட 80% தாக்கி அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தாக்குதலை நிறுத்துகிறோம்

    இந்தச் சூழலில் தான் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். தாக்குதலை தொடர வேண்டாம் என ஈரான் மட்டுமின்றி இதர மத்திய கிழக்கு நாடுகள் கூட தங்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதைத் தொடர்ந்தே தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிக பெரிய ராணுவ வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தோம். அமெரிக்க ராணுவம் முழுமையாக தயார்நிலையில் இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஈரான் கூறியது. மேலும், தாக்குதலை நடத்த வேண்டாம் என பிற மத்திய கிழக்கு நாடுகளும் கேட்டுக் கொண்டன. அதை தொடர்ந்தே தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம்.

    Advertisement

    டிரம்ப் அறிவிப்பு

    ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக, முழுமையாக திறப்பது மற்றும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருக்கிறது. சர்வதேச நலனுக்காகவும், அமைதியான ஈரானின் எதிர்காலத்திற்காகவும், விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையிலும் தாக்குதலை தற்போது ரத்து செய்ய ஒப்புக்கொண்டேன். ஆனால், விரைவில் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்பதே நிபந்தனை" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    எப்போதும் தாக்குதலை நிறுத்தும் முடிவை அமெரிக்கா எடுத்தால் அதற்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிப்பது இஸ்ரேல் தான். ஆனால், இந்த முறை அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், "இதில் இஸ்ரேலும் என்னுடன் இணைந்துள்ளது. அனைவரும் உடனடியாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்" என்றும் தனது பதிவில் குறிப்பிட்டார்.

    Advertisement

    பின்னணி

    அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகான் ஃபிதான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், அதற்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று அராக்ச்சி எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    உலக நாடுகள்

    ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 20% இந்த வழித்தடம் வழியாகவே செல்கிறது. எனவே, இந்த ஜலசந்தியை திறந்து வைப்பது தொடர்பான ஒப்பந்தம் உலக பொருளாதாரத்திற்கும் எரிசக்தி மார்கெட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே டிரம்பின் இந்த அறிவிப்பு ஈரான் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் நிம்மதி பெருமூச்சை விட வைத்திருக்கிறது.

    English Summary

    US President Donald Trump says America paused a planned military strike on Iran after requests(அமெரிக்கா ஈரான் போர் குறித்து டிரம்ப்): Trump latest on US Iran war.