வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், இந்து மதத்தினருக்கு எதிரான இனவெறி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நுழைந்த வலதுசாரி ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு பதிலாக இந்துக்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்றும் தீபாவளி கொண்டாடுவோரை நாடு கடத்த வேண்டும் என்ற பதாகைகளுடன் அவர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐடி, மருத்துவம் என பல துறைகளில் அமெரிக்காவில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலரும் அங்கேயே கூட நிரந்தரமாக குடியேறி விடுகிறார்கள்.
இதன் காரணமாக இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அங்குள்ள இந்தியர்களாலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை, சியாட்டில் சென்டரில் அங்குள்ள இந்திய சமூகத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென டிரம்ப் ஆதரவாளர்களாகக் கருதப்படும் MAGA அமைப்பை சேர்ந்த இருவர் அங்கு வந்தனர். . தீபாவளியை கொண்டாடுவோரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும், கிறிஸ்தவர்களுக்கு பதிலாக இந்துக்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும்" போன்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், அவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியர்கள் அமைதியாக தீபாவளியை கொண்டாடியபோது அங்கு நுழைந்து இதுபோல பிரச்சினை செய்தவர்கள் ஜேக் லாங் மற்றும் தாமஸ் ஆலன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் இதுபோல இவர்கள் பிரச்சினை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மோசமான சம்பவத்தை செய்த ஈடுபட்ட ஜேக் லாங், 2026ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் செனட் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இருப்பினும், வேட்பாளர்களை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலிலேயே அவர் தோல்வி அடைந்தார். மேலும், 2021ல் டிரம்ப் தனது அதிபர் பதவியை விலக மறுத்த போது, அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடந்திருந்தது. அந்த தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் லாங் ஒருவர். இதற்காக அவர் கைதும் செய்யப்பட்டார். இருப்பினும், அதிபர் பதவியில் இருந்து விலகும் முன்பு டிரம்ப் தாக்குதல் நடத்திய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். அதனால் லாங் தப்பினார். அதன் பிறகு தீவிர வலதுசாரி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த சம்பவத்துக்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்பி பிரமிளா ஜெயபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இந்த அருவருப்பான, இனவெறி நிறைந்த காட்சியை கண்டு நான் கடும் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைகிறேன். தீபாவளி ஒரு முக்கியமான பண்டிகை. அச்சமின்றி அதை கொண்டாடும் நம்பிக்கை மக்களிடையே இருக்க வேண்டும். இது போன்ற வெறுப்பு பிரச்சாரத்துக்கு இந்த நாட்டிலோ இடமில்லை" என்றார். அதேபோல அங்குள்ள இந்துக்கள் அமைப்பும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தீபாவளி
இனவெறி
யார் இவர்?
கண்டனம்