டிரம்ப் நிர்வாகத்தில் குழப்பம்.. அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட் ராஜினாமா!

  • வாஷிங்டன்: அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்ட், தனது கணவர் ஆபிரகாமுக்கு மிகவும் அரிய வகை எலும்புப் புற்றுநோய் கண்டறியப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    Advertisement

    துளசி கப்பார்ட்டின் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான ஒரு வகையான எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அவர் கடுமையான மருத்துவச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது கணவரின் அருகில் இருந்து அவரை முழுமையாக கவனித்துக்கொள்வதற்காக பொதுச் சேவையிலிருந்து தற்காலிகமாக விலக விரும்புவதாக துளசி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கணவரின் ஆதரவு

    தங்கள் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் கூட்டு சிறப்பு நடவடிக்கைப் பணியில் இருந்தபோதும், பல அரசியல் பிரச்சாரங்களின் போதும், தற்போதைய பதவியில் இருந்தபோதும் தனது கணவர் தனக்கு ஒரு தூணாக விளங்கியதை நெகிழ்ச்சியுடன் துளசி குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த இக்கட்டான நேரத்தில் தற்போதைய பணிச்சுமை மிகுந்த பதவியில் நீடித்துக்கொண்டு, அவரை இந்தத் தனிமைப் போராட்டத்தில் தவிக்கவிடத் தன் மனசாட்சி இடம் தரவில்லை என எழுதியுள்ளார்.

    ராஜினாமா

    தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தின் பணிகள் எவ்விதத் தொய்வும் இன்றி சுமுகமாக வேறொருவரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புவதாகவும், அதன் காரணமாக இந்த ராஜினாமா வரும் ஜூன் மாதம் 30ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    நன்றியுரை

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த உயரிய பதவியில் தன்னை வழிநடத்த வாய்ப்பளித்த அதிபருக்கும், அமெரிக்க மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கடிதத்தை முடித்துள்ளார். கடிதத்தின் இறுதியில் அவரது வழக்கமான "With love and aloha" என்ற வாழ்த்துடன் கையெழுத்திட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களில் மட்டும் ட்ரம்ப் அமைச்சரவையின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருந்த 4 பெண் ஆளுமைகள் பதவியை விட்டு வெளியேறியுள்ளனர். துளசி கப்பார்ட் இதில் 4-வது நபராவார்.

    தொடரும் குழப்பம்

    அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் விவகாரங்களைக் கவனிக்கும் மிக முக்கியத் துறையான உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிரிஸ்டி நோம், கடந்த மார்ச் மாதத்தில் அதிபர் ட்ரம்பால் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் லோரி சாவேஸ்-டெரெமர் ஆகியோரும் தங்கள் பதவியிலிருந்து விலகியிருக்கின்றனர். இதனால் ஏற்கெனவே டிரம்ப் தலைமை முழப்பத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது துளசியும் ராஜினாமா செய்திருக்கிறார்.

    Topics: #us #trump #cia

    English Summary

    Tulsi Gabbard, Director of U.S. National Intelligence, has resigned from her post after her husband, Abraham, was diagnosed with a very rare form of bone cancer.