திறக்கப்படும் ஹார்முஸ்.. முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

  • வாஷிங்டன்: கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகளைப் பதற்றத்தில் வைத்திருந்த மேற்கு ஆசியப் போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் (US Iran Peace Deal) கிட்டத்தட்ட எட்டப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து, ஹார்முஸ் திறக்கப்பட்டால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை தொடங்கி எல்லாம் கட்டுக்குள் வரும்.

    Advertisement

    வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் இதுவரை முழுமையாக முடியவில்லை. நேரடித் தாக்குதல்கள் குறைந்தாலும் போர் முழுமையாக முடியவில்லை. இதை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் இழுபறி நிலவுகிறது. இந்தச் சூழலில் தான் போர் தொடர்பாகச் சில முக்கியமான அப்டேட்கள் வந்துள்ளது.

    Advertisement

    டிரம்ப்

    இது தொடர்பாகத் தனது டிரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்கா, ஈரான் மற்றும் இதர நாடுகளுக்கு இடையே அமைதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுவிட்டது.. இறுதியாகச் சில விவரங்கள் மட்டுமே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தான் நடத்திய தொலைப்பேசி உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    ஈரான்

    இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹியும் விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்கள், "எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஈரானின் இப்போது எங்கள் முதன்மை குறிக்கோள். இதற்காக 14 முக்கிய அம்சங்களைக் கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நாங்கள் முதலில் சம்மதித்துள்ளோம்" என்றார்.

    Advertisement

    லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, ஈரான் துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் கடல்சார் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.. அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை மீண்டும் விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே தற்போதைய பேச்சுவார்த்தை நடப்பதாக ஈரான் தரப்பு கூறுகிறது.

    மறுப்பு

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் இதயப் பகுதியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாகத் திறந்துவிடப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், ஈரானோ டிரம்பின் இந்த வாதத்தை அடியோடு மறுத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் தரப்பு, "ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான முழுக் கட்டுப்பாடு எப்போதும் போல ஈரானின் வசம் மட்டுமே நீடிக்கும். போரினால் பாதிக்கப்பட்ட கப்பல்களின் போக்குவரத்தை, போருக்கு முந்தைய பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர மட்டுமே ஈரான் சம்மதித்துள்ளது. இதற்காக, போருக்கு முன்பு இருந்தது போல 'சர்வதேசக் கப்பல்களின் தடையற்ற கட்டற்றப் போக்குவரத்திற்கு நாங்கள் அனுமதித்துவிட்டோம் என்று டிரம்ப் கூறுவது முற்றிலும் தவறு!" என்றார்.

    Advertisement

    அணு ஆயுத விவகாரம்

    அமைதி ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக வந்துவிட்டதாக டிரம்ப் கூறினாலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. இது குறித்து ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, "இதற்கு முன்பு ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தம் போட வேண்டுமானாலும், அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தை தான் முதல் மற்றும் பிரிக்க முடியாத நிபந்தனை என்று டிரம்ப் கூச்சல் போட்டு வந்தார். ஆனால், இந்த அமைதி ஒப்பந்தத்தில் அணுசக்தி விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசப்படவில்லை, ஈரான் எவ்வித வாக்குறுதியையும் அளிக்கவில்லை. எனவே டிரம்பின் இந்தப் பதிவு வெறும் அரசியல் விளம்பரம் மட்டுமே" எனப் பதிவிட்டுள்ளது.

    Advertisement

    இப்படி இரண்டு தரப்புமே வெவ்வேறு விதமாக நடந்து சொல்லி வருவதால் குழப்பம் தொடர்கிறது. வளைகுடா போர் எப்படி முடியும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    English Summary

    US President Donald Trump announced that a peace deal with Iran is nearly finalized to end the Middle East conflict(அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்): US Iran Peace Deal Near latest news in tamil.