ஈரான் கதையை மொத்தமாக முடிக்கும் அமெரிக்கா? கையில் எடுத்த புது அஸ்திரம்! தரைவழியை முடக்க புதிய பிளான்

  • வாஷிங்டன்: ஈரான் துறைமுகங்களை அமெரிக்க படைகள் ஏற்கனவே முற்றுகையிட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் தரைவழி போக்குவரத்தையும் கண்காணிக்க சிறப்பு பணிக்குழுவை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. சட்ட விரோத பரிமாற்றங்கள், ஆயுதங்கள் இறக்குமதி, எண்ணெய் விநியோகம் ஆகியவற்றை கண்காணித்து ஈரானுக்கு செக் வைக்க அமெரிக்கா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

    Advertisement

    ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் யுத்தத்தால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் அமெரிக்காவிலும் எதிரொலித்த நிலையில், சமீபத்தில் நடந்த இடைக்கால தேர்தலில் டிரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

    Advertisement

    ஈரானுக்கு எதிராக புதிய அஸ்திரம்

    ஈரான் விவகாரமே தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் என்று வெளிப்படையாக டிரம்ப் ஒப்புக்கொண்டார். ஆனாலும் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனால், மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, ஈரானின் பலத்தை மொத்தமாக முடிக்கும் விதமாக அமெரிக்கா புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

    அதாவது அமெரிக்கா ராணுவம் 20 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. ஈரானின் தரைவழிதடத்தை முடக்குவதே இந்த சிறப்பு பணிக்குழுவின் முக்கிய பணியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படைகள் முற்றுகையிட்டுள்ள நிலையில், தரைவழியாகவும் ஈரானுக்கு அமெரிக்கா செக் வைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, சட்ட விரோதமாக ஆயுதங்களை வாங்குவது, எண்ணெய் விநியோகம் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக தரைவழிப்பாதையை முடக்கும் பணிகளை கண்டறியும் பணியில் இந்த டாஸ்க் போர்ஸ் ஈடுபடும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement
    வழிக்கு வந்த டிரம்ப்! சீனாவுடன் முக்கிய பேச்சுவார்த்தை! ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பும் உலகம்!

    ராணுவ அதிகாரிகள் இடம்பெறுவார்கள்

    அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் பிராட் கூப்பர் தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- "பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் ஈரானின் திறன் மேலும் கட்டுப்படுத்தப்படும். ஆயுதத் தொழிற்சாலைகளை மீண்டும் கட்டமைப்பது மற்றும் தனது ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஈரானின் முயற்சிகளும் இந்த பணிக்குழு மூலமாக தடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    ஈரானின் தரைவழி எல்லைகள் மற்றும் காஸ்பியன் கடல் வழியாக மேம்பட்ட ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பங்கள், பொருளாதாரத் தடைக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சட்டவிரோத வருவாய் ஈட்டுவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்தக் குழு அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படும். புளோரிடாவில் இருந்து இயங்கும் இந்தக் குழுவில் பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடம்பெறுவார்கள் எனவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா முயற்சி தோல்வியில் தான் முடியும்

    ஈரானுக்கு ரஷ்யா, மற்றும் சீனா ஆயுதம் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு நீண்ட காலமாக உள்ளது. இந்த சூழலில், ஈரானின் தரைவழி தொடர்புகளையும் கண்காணிக்கும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்காவின் இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும் என்று ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    கொத்து கொத்தாக வீரர்களை புதைப்பது எப்படி? அமெரிக்கா ராணுவத்துக்கு பயிற்சி! ஈரான் மீது பெரிய போர்?

    இது குறித்து ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், "வேறுபட்ட பெயர்களிலும், விதவிதமான திட்டங்களுடன் ஈரான் மீது பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது" என்று தெரிவித்துள்ளார். ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா கடற்படை முற்றுகையிட்டுள்ளது. இதன் மூலம், 25 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடுக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    US forces already blockading Iranian ports, the United States has established a special task force to monitor the country's overland transport. Through this initiative, the U.S. aims to keep Iran in check by tracking illicit transactions, arms imports, and oil shipments.