கவுதம் அதானி வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? காரணங்களை பட்டியலிட்ட அமெரிக்க நீதித்துறை

  • வாஷிங்டன்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் மேலும் 7 பேர் மீது தொடரப்பட்டிருந்த குற்றவியல் வழக்கை வாபஸ் பெற்றதற்கான காரணங்களை அமெரிக்க நீதித்துறை விரிவாக விளக்கியுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சட்டரீதியாக போதுமான அடிப்படை இல்லை என்றும், இதை முன்னரே வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- "இந்த வழக்கு ஒரு வருடத்திற்கு முன்பே கைவிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது முதலில் இந்த வழக்கே பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    கவுதம் அதானி தொடர்புடைய வழக்கு 2024-ஆம் ஆண்டு ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்திய அரசின் அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்து, அதன் மூலம் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி பல பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்ததாக கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அதை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    அதானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றற்கான 6 முக்கிய காரணங்கள்:

    Advertisement

    1. குற்றச்சாட்டுகள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியாவில் நடந்ததாக கூறப்படுகிறது.
    2. இந்த விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகள் ஏற்கனவே விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    3. முதலீட்டாளர்களுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை.
    4. பெரும்பாலான ஆதாரங்களும், சாட்சிகளும் அமெரிக்காவுக்கு வெளியே உள்ளனர்.
    5. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகும் வாய்ப்பு மிகவும் குறைவு.
    6. வழக்கை நிரூபிக்க தேவையான சட்ட மற்றும் ஆதார சிக்கல்கள் அதிகமாக இருந்தன. என்று பட்டியலிட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் அமெரிக்கா தலையிடுவது இரு நாடுகளின் உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது. அதோடு, கவுதம் அதானி மீது சுமத்தப்பட்ட பங்குச் சந்தை மோசடி குற்றச்சாட்டுகளுக்கும் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்றும் விளக்கமளித்துள்ள அமெரிக்க நீதித்துறை, சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாததுடன், முதலீட்டு தொகையும் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டிருப்பதால் குற்றவியல் வழக்கை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

    Advertisement

    மேலும், அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் (FCPA) கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளும் தற்போதைய அமெரிக்க அரசின் வழிகாட்டுதல்களுடன் பொருந்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதால் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்ற தகவல்களையும் நீதித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த வழக்கை மேலும் நீட்டிப்பது தேவையற்றது என்பதால், நீதிமன்றம் உடனடியாக வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க நீதித்துறை கோரிக்கையை விடுத்துள்ளது.

    English Summary

    Gautam Adani: The US Department of Justice has explained why it dropped the criminal case against Gautam Adani, citing six key reasons including legal hurdles, no investor losses, and jurisdictional challenges.