கையை பிசையும் டிரம்ப்.. 'குண்டுகளின் தாய்' வெடிகுண்டை போட்டாலும் ஈரானை அழிக்க முடியாது! ஏன் தெரியுமா

  • வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் சூழலில், மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ் என்ற பேரழிவை ஏற்படுத்தும் வெடிகுண்டை ஈரான் மீது வீச அமெரிக்கா வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், இந்த வெடிகுண்டு எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் மிக பெரிய வெடிகுண்டான 'மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்' (MOAB) பயன்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிடம் இருக்கும் மிக பெரிய அணுகுண்டு இல்லாத ஆயுதம் இதுதான்.

    Advertisement

    அமெரிக்காவின் திட்டம்

    ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் மலைக்குள் ஆழத்தில் அமைந்துள்ளதாக கருதப்படும் அணுசக்தி மையங்களை குறிவைப்பது திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம். ஆனால், இந்த வெடிகுண்டால் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்த முடிந்தாலும், அமெரிக்கா அழிக்க நினைக்கும் இலக்கை முழுமையாக அழிக்க முடியுமா என்பதுதான் முக்கியக் கேள்வி.

    மதர் ஆஃப் ஆல் பாம்ப்ஸ்

    அதிகாரப்பூர்வமாக GBU-43/B Massive Ordnance Air Blast என்று அழைக்கப்படும் இந்த வெடிகுண்டு, சுமார் 9,800 கிலோ எடை கொண்டது. 2003ல் அமெரிக்க விமானப்படையால் உருவாக்கப்பட்ட இது, சுமார் 9 மீட்டர் நீளம் கொண்டது. ஜிபிஎஸ் வழிகாட்டுதலுடன் செயல்படும் இந்த ஆயுதம், தரையில் மோதுவதற்கு முன்பே வெடித்து, சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், ராணுவ உபகரணங்கள், வீரர்கள் குவிந்துள்ள பகுதிகள் அழித்து, பிறகு உள்ளே சென்று பேரழிவை இது உருவாக்கும்.

    Advertisement
    டிரம்ப் கையில் எடுக்கும் 'குண்டுகளின் தாய்'? அமெரிக்காவின் மெகா திட்டம்.. ஈரான் மீது அட்டாக்!

    ஈரானின் நடான்ஸ் அணுசக்தி வளாகத்துக்கு அருகே, தெஹ்ரானில் இருந்து சுமார் 220 கி.மீ. தொலைவில் உள்ள பிகாக்ஸ் மவுண்டன் மலையில் நிலத்தடி வளாகம் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வளாகத்தின் சில பகுதிகள் தரைமட்டத்திலிருந்து சுமார் 91 முதல் 137 மீட்டர் ஆழத்தில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வளவு ஆழத்தில் உள்ள இலக்கை தாக்குவதற்கு MOAB பொருத்தமான ஆயுதமல்ல.

    ரிப்போர்ட்

    செப்டம்பர் 9ம் தேதி வெளியான CSIS இது குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் சாட்டிலைட் படங்களில் சுரங்க நுழைவாயில்கள் வலுப்படுத்தப்பட்டிருப்பதும், அதை அணுகும் சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி வெளியான மற்றொரு ஆய்வில், சுரங்க நுழைவாயில்களை சுற்றி மண் குவிக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தும் சேதத்தை குறைக்கக்கூடும்.

    Advertisement

    நிலத்தடியில் உள்ள இலக்குகளை அழிப்பதற்காக அமெரிக்காவிடம் GBU-57 என்ற 'பங்கர் பஸ்டர்' வெடிகுண்டும் உள்ளது. இது சுமார் 13,600 கிலோ எடை கொண்டது. MOAB தரைக்கு மேலே பரந்த பகுதியில் வெடிப்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில், GBU-57 மண் அல்லது வலுவூட்டப்பட்ட கட்டமைப்புகளை துளைத்து சென்று வெடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

    இருப்பினும், பிகாக்ஸ் மவுண்டனில் உள்ள இலக்குகளை அழிப்பதில் GBU-57க்கும் சவால்கள் இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மலைக்கு மேலே உள்ள கட்டடங்கள், சாலைகள் மற்றும் சுரங்க நுழைவாயில்களை MOAB சேதப்படுத்தினாலும், ஆழத்தில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் அப்படியே சேதம் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.

    Advertisement
    சவுதியை காக்க டிரம்ப் போடும் உத்தரவு.. முழுவீச்சில் களமிறங்கும் இஸ்லாமிய நாடு? ஹவுதிகளுக்கு சிக்கல்

    என்ன நடக்கும்!

    கடந்த 2017 ஏப்ரல் 13ம் தேதி, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் ஐஎஸ் அமைப்பின் சுரங்க வளாகத்தை குறிவைத்து MOAB முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 36 ஐஎஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கங்களும் வெடிமருந்து கிடங்குகளும் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    பிகாக்ஸ் மவுண்டனுக்குள் என்ன இருக்கிறது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அணுசக்தி உபகரணங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அங்கு யுரேனியம் செறிவூட்டல் நடைபெறுவதாக தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று CSIS ஆய்வு தெரிவித்தது. எனவே, மிக பெரிய வெடிப்பை ஏற்படுத்துவது மட்டுமே இலக்கை முழுமையாக அழித்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

    Advertisement

    இறுதி தீர்வு என்ன?

    எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பொருளாதார பாதிப்பையும் பொதுமக்களுக்கான ஆபத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அவை ஈரானின் அணுசக்தி திறனை அழிக்கும் என்பதும் உறுதியல்ல. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மட்டுமே போதுமானதாக இருக்காது என்றும் இறுதியில் அணுசக்தி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த ஒப்பந்தம் தான் தீர்வாக இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    English Summary

    As US President Donald Trump considers further attacks on Iran, reports suggest the massive MOAB bomb could be an option(ஈரானுக்கு எதிராக மிக பெரிய தாக்குதலை நடத்தும் அமெரிக்கா): MOAB Against Iran might not be a solution.