வாஷிங்டன்: ஈரான் மீது கடந்த 13 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தி வந்த அமெரிக்கா.. தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவதால்தான் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவிடம் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதே தாக்குதல் நின்றதற்கு காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஈரான் யூரேனியத்தை தொடர்ந்து செறிவூட்டி வருகிறது. இப்படியே போனால் அந்நாடு அணு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் பெற்றுவிடும் என்று பயந்த அமெரிக்கா, உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்று சொல்ல.. நீ யாரு என்னு ஆர்டர் போட.. என்று கோபப்பட்ட ஈரான் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் யூரேனியம் செறிவூட்டலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வந்தது.
இதையடுத்து இஸ்ரேலுடன் சேர்ந்து.. அமெரிக்கா தாக்குதல் நடத்த.. சர்வதேச கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி சீல் வைத்தது. இதையடுத்து இரு தரப்பும் சரமாரியாக தாக்கிக்கொண்டது. பின்னர் உலக நாடுகளின் தலையீடு காரணமாக போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா ஓகே சொன்னது. இருப்பினும் கொஞ்ச நாட்களிலேயே இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 13 நாட்கள் தாக்குதலுக்கு பிறகு இந்த போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளிக்க மறுத்ததையடுத்து போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. ஓமன் நாட்டின் பிரதிநிதிகள் குழு ஈரானுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால், இதை கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. ஆனால், உண்மையில் அமெரிக்காவிடம் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதே இந்த போர் நிறுத்தத்திற்கு காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் குறைந்து வருவதாக பென்டன் சமீபத்தில்தான் எச்சரித்திருந்தது. நிலைமை இப்படி இருக்கும்போது போர் நீடித்தால்.. அமெரிக்கா நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் என்பதால்தான் இப்போதைக்கு போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் ஓகே சொல்லியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஈரானுடன் பேசி வருகிறோம். அவர்களும் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருக்கிறார்கள். இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தத்தை எட்டுவதுதான் புத்திசாலித்தனமான முடிவு. அதே சமயம் எங்கள் படைகள் எப்போதும் தயாராகவே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஈரானால் மூடப்பட்ட ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமன் தீவிரமான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், ஆயுதங்கள் இல்லாததால்தான் அமெரிக்கா பின்வாங்கியது என்பது அந்நாட்டின் மீதான மிகப்பெரிய விமர்சனமாக பார்க்கப்படுகிறது.