வாஷிங்டன்: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானில் எஞ்சியுள்ள ஓரிரு அணுசக்தி மையங்களை வெறும் 10 நிமிடங்களில் அமெரிக்கப் படைகளால் தகர்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தொடர் தாக்குதல்கள் என்பது குறைந்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் குறையவில்லை. பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளும் கூட தோல்வியில் தான் முடிந்துள்ளன. இதற்கிடையே ஈரானுக்கு டிரம்ப் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி திறன்களை அமெரிக்கா ஏற்கெனவே முடக்கிவிட்டதாக கூறினார். இருப்பினும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு முக்கிய இலக்குகள் எஞ்சியிருப்பதாகவும், அவற்றையும் அமெரிக்கா அழித்துவிடும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக ஈரானின் நிலத்தடியில் அமைந்துள்ள வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்ட 'பிகாக்ஸ் மவுண்டன்' (Pickaxe Mountain) அணுசக்தி மையத்தை அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "அவர்களின் அணுசக்தி திறனை நாம் அழித்துவிட்டோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டும் கவனிக்க வேண்டியுள்ளது. அதையும் கூட 10 நிமிடங்களில் செய்துவிட முடியும். பிகாக்ஸ் மவுண்டனை தாக்க வேண்டி இருக்கலாம். ஆனால், அதை கூட நாங்கள் நினைத்தால் மிக விரைவில் அழிக்க முடியும்" என்றார். ஈரானை ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்க அனுமதிக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், பேச்சுவார்த்தையில் ஈரான் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்வதில்லை என்றும் விமர்சித்தார். அவர் மேலும், "அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை விரும்புகிறார்கள். ஆனால், அதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பேச்சுவார்த்தையின் போது பல விஷயத்திற்கு ஒகே சொல்லும் அவர்கள், பிறகு திடீரென பின்வாங்கிவிடுகிறார்கள்" என்றார். இதற்கிடையே அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடம் இருந்து எந்த வகையான அச்சுறுத்தல் வந்தாலும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் விடுக்கும் எந்தவொரு அச்சுறுத்தலாக இருந்தாலும், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த போர் தொடங்கிய பின்னர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய முதற்கட்ட தாக்குதலில், அவரது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட ஈரானின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து மொஜ்தபா கமேனி உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், பிப்பரவி தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் தொலைப்பேசி மூலம் ஆலோசித்துள்ளார். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவது குறித்து டிரம்ப் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். அமெரிக்காவில் வரும் 3ம் தேதி மிட் டேர்ம் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதன் பிறகு தாக்குதல் குறித்த இறுதி முடிவை டிரம்ப் எடுப்பார் என தெரிகிறது. இன்னொரு புறம் ஈரான் உடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.அமெரிக்கா
10 நிமிடங்கள் போதும்!
ஈரான் பதிலடி
என்ன நடக்கிறது