வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பெண்கள் பாலியல் புகார்களை அளித்திருந்தனர். இதற்கிடையே முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பீட்ரைஸ் கியூல் என்பவரும் டிரம்ப் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ஹோட்டலில் வைத்து டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் தனக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் டிரம்ப். மற்ற அதிபர்களை போல இல்லாமல் டிரம்ப்பை சுற்றிலும் எப்போதும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக டிரம்ப் கடந்த காலங்களில் பெண்கள் பலரிடம் அத்துமீறி இருப்பதாக புகார்கள் இருந்துள்ளன. ஆபாச பட நடிகை தொடங்கி பலரும் டிரம்ப் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதற்கிடையே டிரம்ப் மீது மற்றொரு பிரபலம் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பீட்ரைஸ் கியூல் என்பவர் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீட்ரைஸ் கியூல் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 1993ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்த அவர், தற்போது பாலியல் பலாத்கார புகாரையும் முன்வைத்துள்ளார். எனினும், வெள்ளை மாளிகை இதனை மறுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை நீதித்துறைக் குழுவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்ட 53 பக்க அறிக்கையில், டிரம்ப்புக்கும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த விசாரணை விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சியினரிடம் அளித்த பேட்டிகளில் கியூல் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அந்த 53 பக்க ரிப்போர்ட்டில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளது. தனது 24 வயதில் 1993ல் நியூயார்க்கில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்றிருந்ததாகவும் அப்போதுதான் டிரம்ப் தன்னை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். தனக்கு விசா ஏற்பாடு செய்வதாகவும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர உதவுவதாகவும் டிரம்ப் உறுதியளித்ததாக கியூல் தெரிவித்துள்ளார். அப்போது டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக இருந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன், தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாராம். மேலும், மாரா-லாகோவில் நடைபெறும் விருந்துக்கு அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான பிளாசா ஹோட்டலில் மாடியில் தன்னை அழைத்து சென்றதாகவும் அங்கு டிரம்ப் தன்னை பின்னால் இருந்து பிடித்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். தனது ஆடை கிழிந்ததுடன் உடலில் காயங்களும் ரத்தக்கசிவும் ஏற்பட்டதாகவும் கியூல் குற்றம்சாட்டியுள்ளார். பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, விசா மற்றும் பல்கலைக்கழக அட்மிஷனுக்கு உதவுவதாக டிரம்ப் மீண்டும் உறுதியளித்ததுடன், இது குறித்து வெளியே கூறக்கூடாது என்றும் வலியுறுத்தியதாக கியூல் கூறியிருக்கிறார். இதில் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளதே எப்ஸ்டீன் பெயர் இதில் இருப்பது தான்! சிறுமிகள் உள்ளிட்டவர்களை கடத்தி பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எப்ஸ்டீன், 2019ல் சிறையில் விசாரணை காவலில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். டிரம்பின் பெயர் எப்ஸீடன் கோப்புகளிலும் இருக்கிறது. இருப்பினும், எப்ஸ்டீனுடனான நட்பை தான் முன்பே முடித்து கொண்டதாகவும் எப்ஸ்டீன் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுக்கும் ஜனநாயக கட்சியினர், அமெரிக்க நீதித்துறையும் எஃப்.பி.ஐ.யும் டிரம்ப்பை பாதுகாப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எப்ஸ்டீனுடன் தொடர்புடைய சூழலில் ஐந்து பெண்கள் டிரம்ப் மீது பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இது குறித்து சுதந்திரமான விசாரணை நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.மிஸ் சுவிட்சர்லாந்து
என்ன நடந்தது
பலாத்காரம்
எப்ஸ்டீன்