சொந்தக் கட்சியிலேயே விழுந்த அடி.. டிரம்பின் அதிகாரத்திற்கு 'செக்' வைத்த அமெரிக்க நாடாளுமன்றம்


  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான ஒரு மிக முக்கியமான தீர்மானம் அமெரிக்காவின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என்று இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. மேலும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் அதிபர் தன்னிச்சையாக ராணுவத்தை இறக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு செக் வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இனி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக எந்தவொரு ராணுவ ஆக்ஷனிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கக் கூடாது! என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது..

    Advertisement

    டிரம்பிற்கு எதிராக தீர்மானம்

    இதற்கிடையே அதிபர் டொனால்ட் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் செனட் சபையிலேயே டிரம்பிற்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. செவ்வாயன்று அமெரிக்கச் செனட் சபையில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கெடுப்பில், 50-48 என்ற கணக்கில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இந்தக் கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டொனால்ட் டிரம்பின் போக்கினால் மத்திய கிழக்கில் பல மாதங்கள் பதற்றம் நீடித்து வந்தது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்களே மாற்றி வாக்களித்தனர். அவர்களும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்தத் தீர்மானம் ஏற்கனவே இந்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    ஈரான் போர்

    கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆரம்பித்த அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல், உலக அளவில் பெரும் பொருளாதாரச் சேதங்களையும், கச்சா எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க மக்கள் மத்தியிலும் இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையிலும் இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

    இது தொடர்பாக அவர்கள் மேலும், "ஒரு நாட்டின் மீது ராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்கும், போரை நீட்டிப்பதற்கும் முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது. அதிபர் தனது எல்லையை மீறி தன்னிச்சையாக ராணுவத்தைக் களமிறக்குவதையும், மோதலைப் பெரிதாக்குவதையும் அனுமதிக்க முடியாது!" என்பதே இந்த தீர்மானத்தின் சாராம்சம் ஆகும்.

    Advertisement

    முக்கியம்

    இந்த தீர்மானம் டிரம்பிற்கு எதிராக விழுந்த மிக பெரிய ஒரு அடியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், டிரம்பிற்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் டிரம்பின் குடியரசு கட்சியினரே மாற்றி வாக்களித்துள்ளதால் இது நிறைவேறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    இது குறித்து டொனால்ட் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை (White House) இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. எனினும், வெளிநாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபருக்கு முழு அரசியல் சாசன அதிகாரம் இருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    English Summary

    Major setback for the Trump administration, the US Senate voted pass a joint resolution blocking unauthorized military actions(அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக தீர்மானம்): Trump to Restrict Military Action on Iran.