ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்


  • வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மீது ஈரானே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், ஹார்மூஸ் அருகே உள்ள ஈரானின் ரேடார் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.

    Advertisement

    இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவும் தாக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    அமெரிக்காவின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

    மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையேயான போரால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் இதில் இறுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு இடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அந்த நாட்டின் மீது நேற்று முன் தினம் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

    இதற்கு இஸ்ரேலும் பதிலடியாக தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து பதில் தாக்குதலை நடத்தியது. திருப்பி தாக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த பதற்றத்திற்கு நடுவே, அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான அபாச்சி ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

    Advertisement

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

    ஈரான் தாக்கியதால்தான் இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஈரான் மீது கடும் கோபம் அடைந்த அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "அமெரிக்காவின் அபாச்சி (Apache) ஹெலிகாப்டர், ஈரான் ஏவிய ஒருவழித் தாக்குதல் ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது." என்றார்.

    இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இரு அமெரிக்க விமானிகளும் காயமின்றி உயிர் தப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அதே நேரத்தில் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்து இருந்த நிலையில்தான் அமெரிக்கா தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பல ஈரானிய வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

    Advertisement

    பட்டும் படாமல் விளக்கம் அளித்த ஈரான்

    இந்த தாக்குதல்கள், அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலாக மேற்கொள்ளப்பட்ட "தற்காப்பு நடவடிக்கைகள்" என அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான அதி நவீன ஹெலிகாப்டரை ஈரான் தாக்கியதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில், அதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அர்காச்சி தனது பதிவில், "ஹார்முஸ் நீரிணை அமெரிக்க கடற்கரையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

    எங்கள் நாட்டின் எல்லைகளுக்கு அருகில் செயல்படும் வெளிநாட்டு படைகள், அவர்களுடைய சொந்த மனிதத் தவறுகள், எதிர்பாராத விபத்துகள் அல்லது மோதல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் காரணமாக எப்போதும் ஆபத்தில் உள்ளன. இந்த ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வு, அவர்கள் இப்பகுதியை விட்டு வெளியேறுவதுதான்' என்று பட்டும் படாமல் பதிவிட்டார். அமெரிக்கா ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மீண்டும் போர் வெடிக்கிறதா?

    அமைதி பேச்சுவார்த்தை தொடருமா அல்லது மீண்டும் போர் வெடிக்க இருக்கிறதா? என்ற பதைபதைப்பு சர்வதேச சமூகம் மத்தியில் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மோதலால் விநியோகம் பாதிக்கப்பட்டு மேலும் விலை உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

    English Summary

    US Strikes Iran: The United States has launched strikes on Iranian radar and air-defense sites near the Strait of Hormuz after an American Apache helicopter was reportedly shot down. President Donald Trump blamed Iran and promised a strong response, escalating tensions across the Middle East.