நான் தான் இயேசுவின் அவதாரம்.. வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்!

  • வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றனர். 21 வயதே ஆன அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்றும் தன்னை ஏசு என்று அந்த நபர் நம்பிக்கொண்டு இருந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளால் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டவர் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அமெரிக்காவில் பொதுவாகவே துப்பாக்கி வைத்திருக்கப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் யார் வேண்டும் என்றாலும் ஈஸியாக துப்பாக்கிகளை வாங்கலாம் என்ற நிலையே இருக்கிறது. இதனால் பல கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கூட தொடர்ந்து நடந்தே வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

    Advertisement

    துப்பாக்கிச் சூடு

    இந்திய நேரப்படி மே 24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் சாவடிக்கு வெளியே உள்ள 17-வது தெரு நார்த்வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் நாசிரே பெஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாசிரே பெஸ்ட் சந்தேகத்திற்குரிய வகையில் விசித்திரமாக நடந்து கொண்டதை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கவனித்தனர். அப்போது திடீரெனத் தனது துப்பாக்கியை எடுத்த பெஸ்ட், சரமாரியாகச் சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. அந்த நபர் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    சீக்ரெட் சர்வீஸ்

    துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனே, சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் பெஸ்ட்டை சுட்டு வீழ்த்தினர். இதில் பலத்த காயமடைந்த பெஸ்ட் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நாசிரே பெஸ்ட்டின் நோக்கம் என்ன என்பது குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அவரது பின்னணி குறித்து சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, வெள்ளை மாளிகையின் தடை செய்யப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தது மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தது போன்ற குற்றங்களுக்காக அவர் இரண்டு முறை வாஷிங்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    நான் தான் இயேசு

    கடந்த முறை கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசிய பெஸ்ட், "நான் தான் இந்த நவீன யுகத்தின் இயேசு கிறிஸ்துவின் மறு அவதாரம்; அதனால் தான் நான் வேண்டுமென்றே கைது செய்யப்பட விரும்புகிறேன்" என்று உளறி இருக்கிறார். அவர் அடிக்கடி வெள்ளை மாளிகை பாதுகாப்புச் சாவடிகள் அருகே தேவையின்றிச் சுற்றித் திரிந்ததால், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் அவருக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது. அந்த உத்தரவை மீறித்தான் அவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

    அவர் ஏற்கனவே மனநலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்ற கோணத்திலும் இப்போது விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ அமைப்பும் விசாரணை நடத்தி வருகிறது.

    Advertisement

    எஃப்.பி.ஐ சொல்வது என்ன

    இது தொடர்பாக எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெள்ளை மாளிகை வளாகத்தின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவ இடத்திற்கு எஃப்பிஐ அதிகாரிகள் உடனடியாக விரைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எஃப்பிஐ வழங்கி வருகிறது. இது குறித்த முழுமையான விவரங்கள் வெளிவந்தவுடன், பொதுமக்களுக்குத் தேவையான அடுத்தடுத்த விபரங்களை வெளியிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் எப்படித் துப்பாக்கி சென்றது என்பதும் மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்கும் விதிகளில் இருக்கும் குளறுபடிகளையே இது காட்டுவதாக இருக்கிறது.

    English Summary

    21-year-old gunman identified as Nazire Best was shot dead by Secret Service agents outside the White House(அமெரிக்கா வெள்ளை மாளிகை துப்பாக்கி சூடு): White House Shooting latest news in tamil.