டெல்லி: இந்தியாவை கடுமையாக விமர்சித்து, இந்தியா மீது அதிகபட்ச வரியை விதிக்க வேண்டும் என்று சொன்ன நபருக்கு டிரம்ப் அரசு புதிய பதவியை வாரி வழங்கியுள்ளது. இந்தியா மீது வரி விதிக்க வேண்டும் என விமர்சித்த ஸ்டீபன் மில்லர் யார்.. இவருக்கு டிரம்ப் அரசு என்ன பதவியை வழங்கியுள்ளது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக இருந்த சூசி வைல்ஸை டிரம்ப் அந்த பதவியில் இருந்து நீக்கினார்.. தொடர்ந்து துணை தலைமை அதிகாரியாக இருந்த ஸ்டீபன் மில்லருக்கு தலைமை அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டீபன் மில்லர் கடந்த காலங்களில் இந்தியாவை மிக கடுமையாக விமர்சித்தவர். ஸ்டீபன் மில்லர் கடந்த 2025ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கடுமையாக விமர்சித்திருந்தார். சீனாவுக்கு இணையாக இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், இதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், அமெரிக்காவின் குடியேற்ற நடைமுறைகளை இந்தியா தவறாகப் பயன்படுத்துவதாகவும் விமர்சித்தார். இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையையும் அவர் கேள்வி எழுப்பினார். அதாவது இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படாத நிலையில், அமெரிக்க பொருட்கள் இந்தியாவில் அதிக வரியை எதிர்கொள்வதாக விமர்சித்தார். அதேபோல டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளை உருவாக்கிய முக்கிய நபர்களில் மில்லரும் ஒருவர். அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் வருவதை கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விதிகளை கடுமையாக்கவும் அவர் வலியுறுத்தி வந்தார். குறிப்பாக, H-1B விசா நடைமுறைகளில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்ற டிரம்ப்பின் நிலைப்பாட்டிலும் மில்லருக்கு முக்கியப் பங்கு இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அலெக்ஸ் பிரெட்டி என்ற அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்ற சம்பவம் சர்ச்சையானது. இருப்பினும், அந்த நடவடிக்கை சரியானது என்ற மில்லர், ஆதாரம் இல்லாத போதிலும் அலெக்ஸ் பிரெட்டியை உள்நாட்டு பயங்கரவாதி என்று குறிப்பிட்டார். அந்தளவுக்கு டிரம்ப் அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர் தான் இந்த மில்லர். 41 வயதாகும் ஸ்டீபன் மில்லர், 2016ம் ஆண்டு முதலே டிரம்ப் உடன் தான் இணைந்து பணியாற்றி வருகிறார். 2017 முதல் 2021 வரை டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் ஆலோசகராக இருந்தார். 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்த பிறகு, 'அமெரிக்கா ஃபர்ஸ்ட் லீகல்' என்ற பழமைவாத அமைப்பை தொடங்கினார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானபோது துணை தலைமை அதிகாரி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளுமே இப்போது எதிர்க்கட்சி வசம் சென்றுள்ளது. இதனால் அடுத்த இரு ஆண்டுகளுக்கு அரசை நடத்துவது டிரம்பிற்கு கடினமாகவே இருக்கும். எதிர்க்கட்சிகளை சமாளிக்கவே டிரம்ப் இதுபோல பழமைவாத தலைவருக்கு என்ன நடந்தாலும் தனக்கு ஆதரவாக நிற்கும் ஒருவருக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார்.இந்தியா மீது விமர்சனம்
குடியேற்ற கொள்கை
ஸ்டீபன் மில்லர்
என்ன காரணம்