சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சற்குணம் 'எக்ஸாம்' வெப் சீரிஸ் மூலம் மீண்டும் சந்தித்திருக்கிறார். களவாணி, வாகை சூட வா போன்ற வெற்றி படங்களை கொடுத்த சற்குணம், இந்த முறை திரையரங்கத்தை விட ஓடிடி தளத்தை தேர்வு செய்து சமூகத்தில் பலரையும் நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸ் (Exam Web Series Review) தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக அரசு வேலைக்காக ஆண்டாண்டு காலம் உழைத்து படிக்கும் இளைஞர்களின் மனநிலையை மையமாக வைத்து கதை நகர்வது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசு வேலை என்பது இன்னும் பல குடும்பங்களின் பெரிய கனவாக இருக்கிறது. க்ரூப் 1, க்ரூப் 2 போன்ற முக்கிய அரசு தேர்வுகளுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பகல் இரவு பாராமல் உழைக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வுகளிலேயே பின்னால் பணமும் அதிகாரமும் சேர்ந்து நடக்கும் முறைகேடுகள் எத்தனை பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது என்பதைத்தான் இந்த சீரிஸ் பேசுகிறது. நேர்மையாக தேர்வு எழுதுபவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? அதே நேரத்தில் குறுக்கு வழியில் அதிகாரப் பதவியை அடைவோர் எப்படி அமைப்பையே தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்? இதுதான் இந்த சீரிஸின் மையக் கருத்து. இந்த தொடரின் மிகப்பெரிய பலம் துஷாரா விஜயன்தான். காவல்துறை அதிகாரியாக அவர் வரும் தோற்றம் கம்பீரமாக இருக்கிறது. குறிப்பாக உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் வெளியே தைரியமாக நடந்து கொள்வது போன்ற காட்சிகளில் அவரது முகபாவனைகள் மிகவும் இயல்பாக இருக்கின்றன. எமோஷனலான காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படுத்தும் அளவுக்கு அமைந்திருக்கின்றன. அருவி படம் மூலம் தனக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிய அதிதி பாலனும் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு அதிகமான காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் இடங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இந்த தொடரின் மிகப்பெரிய பலம் அதன் கதைக்களம். அரசு தேர்வு முறைகேடு என்பது இதுவரை அதிகமாக பேசப்படாத ஒரு விஷயம். அதை சுவாரஸ்யமாகவும் பதட்டத்துடனும் சொல்ல முயன்றிருப்பது பாராட்டத்தக்கது. சாம் சி.எஸ். அமைத்த பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் பதட்டத்தை உயர்த்துகிறது. ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. சில காட்சிகள் நம்பகத்தன்மையை சற்றே குறைக்கின்றன. குறிப்பாக மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை மிகவும் எளிதாக கட்டுப்படுத்திவிடுவது போன்ற காட்சிகள் கொஞ்சம் செயற்கையாக தோன்றுகின்றன. அதேபோல் வில்லன் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலிமையான காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்ற உணர்வு வருகிறது. சில பிளாஷ்பேக் காட்சிகளும் முன்கூட்டியே யூகிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. சாதாரண கிரைம் த்ரில்லர் மாதிரி இல்லாமல் சமூகத்தில் உண்மையாக நடக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஆழமாக இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், மொத்தத்தில் சுவாரஸ்யமாக பார்க்கக்கூடிய ஒரு தொடராக இது அமைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்குணம் மீண்டும் கவனம் ஈர்த்திருக்கிறார் என்று சொல்லலாம். அரசு வேலை கனவு காண்பவர்களுக்கு இந்த தொடர் இன்னும் நெருக்கமாகத் தோன்றும்.என்ன கதை?
துஷாரா விஜயன் மிரட்டல்
அதிதி பாலன் கவனம்
பலம் என்ன?
குறைகள் என்ன?
பார்க்கலாமா?