Karuppu OTT Release: அன்கட் வெர்ஷனோடு ஓடிடிக்கு வரும் கருப்பு.. சூர்யாவின் மாஸ் அவதாரம் கலக்கல்!

  • சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படம் குறித்து தற்போது அதிகமாக பேசப்படும் விஷயம் அதன் ஓடிடி வெளியீடுதான். திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம், வீட்டிலிருந்தபடியே எப்போது பார்க்க கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    Advertisement

    ஆரம்பத்தில் மே 14-ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பைனான்ஸ் தொடர்பான சிக்கல்கள், தயாரிப்பு பிரச்சினைகள் போன்ற காரணங்களால் வெளியீட்டில் திடீர் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளை சரி செய்ததாக கூறப்பட்டது.

    Advertisement

    கருப்பு ரிலீஸ்

    இதையடுத்து மே 15-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை பற்றி பேசும்போது, இது ஒரு சாதாரண கமர்ஷியல் படம் மட்டும் அல்ல. சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள், ஏழை மக்களின் போராட்டம், கிராமிய தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை கலந்த ஒரு ஃபாண்டஸி ஆக்ஷன் திரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

    கருப்பசாமி நம்பிக்கையை மையமாக வைத்து கதையை நகர்த்திய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் சூர்யாவுடன் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்ததுடன் இயக்கத்தையும் கவனித்துள்ளார். மேலும் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் சாய் அப்யங்கரின் இசையும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

    Advertisement

    கருப்பு வசூல் நிலவரம்

    பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பார்த்தாலே படத்தின் வெற்றி புரிகிறது. முதல் நாளில் சுமார் ரூ.15.5 கோடி இந்திய நெட் வசூல் செய்த படம், இரண்டாவது நாளில் ரூ.24 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மூன்றாவது நாளில் வசூல் இன்னும் உயர்ந்து ரூ.28 கோடியை கடந்தது. நான்காவது நாளிலும் வசூல் வேகம் குறையாமல் தொடர்ந்ததால் உலகளவில் ரூ.140 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் சமீபத்திய மிகப்பெரிய கம்பேக் படமாக இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கருப்பு பட ஓடிடி அப்டேட்

    இந்த நிலையில், 'கருப்பு' படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக பெரிய தமிழ் படங்கள் திரையரங்க வெளியீட்டிற்கு 4 வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் நடைமுறையைப் பார்த்தால், ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் 'கருப்பு' ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அல்லது அமேசான் பிரைம் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

    Advertisement

    மேலும் ரசிகர்களிடையே இன்னொரு பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது. படத்தில் யோகி பாபு, இன்ஸ்டாகிராம் பிரபலங்களான சதீஷ், தீபா, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தும், அவர்களது காட்சிகள் திரையரங்க வெர்ஷனில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த நீக்கப்பட்ட காட்சிகளை சேர்த்து அன்கட் வெர்ஷன் ஆக ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    திரையரங்கில் கருப்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, ஓடிடியிலும் அதே மாயாஜாலம் நடக்குமா என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வருகிறது என்பதையே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    English Summary

    Suriya’s blockbuster Karuppu, directed by RJ Balaji, continues its strong theatrical run, and fans are now eagerly waiting for its OTT release. Reports suggest that Amazon Prime Video has acquired the digital streaming rights, though no official confirmation has been released yet. Based on the usual release window for major Tamil films, Karuppu is expected to arrive on OTT in the second week of June. Fans are also hoping for an uncut digital version, as several actors including Yogi Babu and popular social media personalities reportedly had scenes removed from the theatrical cut. While the official streaming date remains unannounced, anticipation for the digital premiere is growing rapidly.