சென்னை: பொதுவாக இன்றைக்கு கணிசமானோருக்கு கொரியன் வெப் சீரியஸ் என்றால், என்னமோ போடா மாதவா என்ற மனநிலை தான் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கொரியன் வெப் சீரியஸ்கள் மிகவும் பிடிக்கும். காரணம் கதைக்களம், தேர்வு, அவர்களின் டப்பிங் போன்ற காரணங்களை கூறுவார்கள். இப்போது நெட் பிளிக்ஸில் வெளியாகி உள்ள wonderfools வெப்சீரியஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது. கதைக்களம் 1999களில் நடப்பதாக இருக்கிறது.. வொர்த் வர்மா ஓர்த் என்று நெட்டிசன் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தார்கள்.
அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்க்கும் முன்பு, wonderfools வெப்சீரியஸ் பற்றி பார்ப்போம். 'தி வொண்டர்ஃபூல்ஸ்' என்பது கடந்த மே மாதம் 15ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு புகழ்பெற்ற தென் கொரிய சூப்பர் ஹீரோ ஆக்ஷன்-காமெடி வெப் சீரீஸ். இந்தத் தொடர் தற்போது தமிழ் டப்பிங்கிலும் நெட்பிளிக்ஸில் பார்க்க முடிகிறது. இந்த தொடரை யூ இன்-சிக் என்பவர் இயக்கி உள்ளார். பார்க் யூன்-பின் , சா யூன்-வூ , கிம் ஹே-சூக், சோய் டே-ஹூன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்டது. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் வரை இருக்கும். ஒட்டுமொத்தமாக 8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து பார்க்க வேண்டியதிருக்கும்.
'தி வொண்டர்ஃபூல்ஸ்' வெப்சீரியஸ் கதை 1999-ஆம் ஆண்டு 'ஹேசாங்' என்ற நகரத்தில் வாழும் சில விசித்திரமான,வால்தனமான இளைஞர்களுக்கு எதிர்பாராதவிதமாக திடீரென சில சூப்பர் பவர்கள் கிடைக்கின்றன. ஆனால், அந்தச் சக்திகளை அவர்களால் சரியாகக் கட்டுப்படுத்த தெரியவில்லை.அதே நேரத்தில், உலகம் அழியப் போகிறது என்ற வதந்தியும், நகருக்குள் சில தீய சக்திகளின் அச்சுறுத்தல்களும் எழுந்து வருகிறது. தங்களுக்குக் கிடைத்த விசித்திரமான சக்திகளை வைத்துக்கொண்டு, இந்த வால் பட்டாளம் எப்படி அந்த நகரத்தைக் காப்பாற்றுகிறது என்பதைப் பல அதிரடி ஆக்ஷன் மற்றும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் வடிவமைத்து உள்ளார் யூ இன்-சிக். மிக தத்ரூபமாக கார் பறக்கும் காட்சிகள், மேஜிக் காட்சிகள், சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சனிக்கிழமை மாலையில் ஏதேட்சையாக வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் பார்க்க நேர்ந்தது. முதல் ஒரு மணி நேரம் காமெடியாகவே இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு எபிசோடும், சற்று கூட தொய்வே இல்லாமல் சென்றது. சாவே இல்லாத குழந்தையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்குகிறார்கள். அந்த குழந்தை யார் என்பதை கண்டுபிடிக்க ஒரு டீம் முயற்சி செய்கிறது. அவர்களுக்கு அந்த குழந்தை கிடைத்தால் தான், அவர்களின் சூப்பர் பவர் மற்றும் பிரச்சனகளை சரி செய்ய முடியும் என்கிற நிலை. மறுபக்கம் சூப்பர் பவர் கிடைத்து அதனை சரியாக பயன்படுத்த தெரியாத நகரத்து இளைஞர்களின் சேட்டைகள் என விறுவிறுப்பாக இருந்தது. இதில் யூன் சே-னியை பொறுத்தவரை இவரது இதயத் துடிப்பு அதிகமாகும்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தானாகவே நொடியில் மாறும் சக்தி இருக்கும். அதேபோல் லீ உன்-ஜியோங் அமைதியான அரசு ஊழியர், ஆனால் கைகளைத் தொடாமலேயே பொருட்களை நகர்த்தும் 'டெலிகினெசிஸ்' சக்தி கொண்டவர். கியுங்-ஹூன்: இவர் பொய் சொல்லும்போதெல்லாம் சுவர்கள் அல்லது தரையோடு ஒட்டிக்கொள்ளும் சக்தி இவருக்கு இருக்கும். இதில் ரோ-பின் பார்ப்பதற்குப் சாதுவாக இருந்தாலும், கோபம் வரும்போது அசுர பலம் கொண்டவராக மாறிவிடுவார். சாகா வரம் பெற்ற குழந்தை தான் படத்தின் கதை. அதை வைத்து தான் சாகசங்கள் எல்லாமே இடம் பெற்று இருக்கும். இந்த கதை நள்ளிரவு தாண்டி போய்கொண்டே இருந்தது.போதும் என்று எழுந்திருக்க மனமே வரவில்லை. முழுமையாக பார்த்த பின்னரே திருப்தி வந்தது. அந்த அளவிற்கு ஒர்த் ஆக இருந்தது. வொர்த் வர்மா ஓர்த் என்று கொரியன் சீரியஸே பிடிக்காதவர்கள் கூட புகழ்ந்து தள்ளுகிறார்கள். நேரம் கிடைத்தால் நெட் பிளிக்ஸில் போய் பாருங்கள். வயிறு குலுங்க சிரிக்கலாம்.. அதேபோல் ஆக்சன் திரில்லருக்கும் பஞ்சம் இருக்காது என்ற நெட்டிசன்களின் வாதம் உண்மை தான். பார்க்கலாம்..