முடிவுக்கு வந்த அமெரிக்க வழக்கு.. பின்னணியில் எந்த டீலும் இல்லை! நீதிமன்றத்தில் அதானி தந்த விளக்கம்


  • நியூயார்க்: லஞ்சம் மற்றும் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை அமெரிக்க நீதித்துறை வாபஸ் பெறும் முடிவுக்கும், தமக்கும் இடையே எந்தவித ரகசிய ஒப்பந்தமோ, பேரமோ இல்லை என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியப்பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூலை 8ம் தேதி பிறப்பித்த உத்தரவின் பேரில் கவுதம் அதானி இந்த சத்திய பிரமாணத்தை தாக்கல் செய்துள்ளார். வழக்கை கைவிடும் முடிவுக்கு பின்னால் ஏதேனும் ரகசிய ஒப்பந்தம் அல்லது பரஸ்பர நன்மை தொடர்பான ஏற்பாடுகள் இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    அதானி

    இதற்கு பதிலளித்துள்ள அதானி, "வழக்கை கைவிடுவதற்காக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. எந்த சலுகையும் கோரப்படவில்லை, பெறப்படவில்லை அல்லது ஏற்று கொள்ளப்படவில்லை. வழக்கை வாபஸ் பெறுவதற்காக எந்த பரிமாற்றமும் நடந்ததாக எனக்கு தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

    பின்னணி

    இந்த வழக்கு கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில், அப்போதைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க நீதித்துறையால் பதிவு செய்யப்பட்டது. இந்தியாவில் மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியபோது தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் கவுதம் அதானி உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

    Advertisement

    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அதானி தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது. சமீபத்தில், இந்த வழக்கை நிரந்தரமாக கைவிட அமெரிக்க நீதித்துறை கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், எதிர்காலத்தில் இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மீண்டும் வழக்கு தொடரவே முடியாத நிலை ஏற்படும்!

    முதலீடு

    இதற்கிடையில் அதானி குழுமம் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதே வழக்கை கைவிட காரணம் என்ற தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாகின. இதை மறுத்துள்ள கவுதம் அதானி, அந்த முதலீட்டு திட்டம் 2024 நவம்பர் 13ம் தேதியே அறிவிக்கப்பட்டதாகவும், குற்றப்பத்திரிகை வெளியாவதற்கு முன்பே அது அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    அமெரிக்க நீதித்துறை மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC அதிகாரிகளுடன் அதானியின் சட்ட ஆலோசகர்கள் பலமுறை சந்தித்து சட்ட ஆவணங்கள், நிபுணர் அறிக்கைகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்ததாகவும் சத்தியப்பிரமாணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதலீட்டு திட்டம் நீதித்துறையின் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க நீதித்துறை

    இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறையும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கை கைவிடும் முடிவு முழுமையாக சட்ட மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலான குற்றச்சாட்டுகள் இந்தியாவில் நடந்ததாக கூறப்படுவதுடன், முதலீட்டாளர்களுக்கு நேரடி நிதி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இந்திய அதிகாரிகளாலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் நீதித்துறை கூறியுள்ளது.

    Advertisement

    மேலும், இந்த வழக்கை கைவிடும் முடிவை எடுத்த முக்கிய அதிகாரியான ஆர். ட்ரெண்ட் மெக்காட்டர், "அதானி குழுமத்தின் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவிப்பு இல்லை என்றாலும் இந்த வழக்கை கைவிட நான் பரிந்துரைத்திருப்பேன்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். வெளிநாட்டு ஊழல் தடுப்பு சட்டம் தொடர்பான முன்னுரிமைகள் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தில் மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நீதிமன்றம் கருத்து

    இருப்பினும், வழக்கை கைவிடும் கோரிக்கையை உடனடியாக ஏற்க நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் தயாராக இல்லை. நீதித்துறையின் விளக்கங்களில் சில புதிய கேள்விகள் எழுந்துள்ளதாகவும், பொதுவெளியில் அறிவிக்கப்படாத ஏதேனும் ஒப்பந்தம் இருந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இதனால் கவுதம் அதானியின் சத்தியப்பிரமாணம், நீதித்துறையின் விளக்கங்கள் மற்றும் இரு தரப்பினரின் வாதங்களை ஆய்வு செய்த பிறகே வழக்கை முழுமையாக கைவிடுவது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Adani Group Chairman Gautam Adani US case: அமெரிக்க மோசடி வழக்கில் அதானி பதில் மனு