கேரளா ஸ்டைல் பீட்ரூட் தோரன்: தேங்காய் அரைத்து ஊற்றிய சத்தான பீட்ரூட் பொரியல்!


  • Authentic Kerala Beetroot Thoran Recipe In Tamil: சத்தான காய்கறிகளை சுவையாகவும், மணமாகவும் எப்படி சமைப்பது என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே கேரளாவின் பாரம்பரிய சுவையில் மணக்க மணக்க பீட்ரூட் தோரன் ரெசிபி இங்கே உள்ளது. பொதுவாக பீட்ரூட்டில் இருக்கும் ஒருவித மண் வாசனை பலருக்கு பிடிக்காது.

    Advertisement

    ஆனால் தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து செய்யும் இந்த முறையில் சமைத்தால் அதன் சுவையே தனி தான். ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த பொரியல் மதிய உணவிற்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதனை மிக எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

    Advertisement

    பீட்ரூட்டில் இரும்புச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது ரத்த சோகையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. கேரளா ஸ்டைல் தோரன் முறையில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து சேர்ப்பதால், பீட்ரூட்டின் இனிப்பு சுவையுடன் காரமும் மணமும் இணைந்து நாவிற்கு விருந்தளிக்கும்.

    இது சாதம், சாம்பார் மற்றும் ரசத்துடன் சேர்த்து சாப்பிட மிகச் சிறந்த காம்பினேஷன் ஆகும். ஆரோக்கியமான வாழ்விற்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

    தேங்காய் அரைக்கும் போது தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைப்பது தான் இந்த டிஷ்ஷின் ரகசியமே. இந்த டிஷ்ஷை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    தேவையான பொருட்கள்

    • பீட்ரூட் - 2 பெரியது (பொடியாக நறுக்கியது)
    • சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
    • கடுகு - 1 டீஸ்பூன்
    • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    • கறிவேப்பிலை - ஒரு கொத்து
    • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    • தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    • உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    • தேங்காய் துருவல் - 1/2 கப்
    • பச்சை மிளகாய் - 3
    • சீரகம் - 1 டீஸ்பூன்
    • பூண்டு - 2 பல்

    செய்முறை விளக்கம்

    • முதலில், பீட்ரூட்டை நன்றாகக் கழுவி தோலை நீக்கிவிட்டு, மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
    • பின், ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
    • அடுத்து, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
    • பிறகு, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும்.
    • அடுத்து, நறுக்கிய பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
    • பின், பீட்ரூட் வேகுவதற்கு சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேகவிடவும்.
    • இறுதியாக, பீட்ரூட் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைக்கவும்.

    Topics: #Veg recipes