Instant Pearl Millet Dosa Recipe In Tamil: டிபன் செய்து சாப்பிட மாவு அரைக்க நேரமில்லையா, அப்படியே அரைத்தாலும் அதை புளிக்க வைப்பதில் பிரச்சினையா? கவலையை விடுங்க! மாவு புளிக்க வைக்காமல் கிரிஸ்பியான தோசை சாப்பிடலாமா? வழக்கமான அரிசி மாவில் செய்யும் தோசைக்கு மாற்றாக, உடலுக்கு அதிக வலு சேர்க்கும் சிறுதானியங்களைச உணவில் சேர்ப்பது நல்லது.
கம்பு ஒரு மிகச்சிறந்த சிறுதானியம் என்பதால் இதில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பொதுவாக கம்பு தோசை செய்ய மாவை அரைத்து பல மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும், ஆனால் இந்த முறையில் தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து உடனடி தோசை சுட்டு சாப்பிடலாம்.
இந்த தோசை மாவு செய்வது எப்படி, தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/2 கப்
- ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1/4 கப்
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
- கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை விளக்கம்
- முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கம்பு மாவு, அரிசி மாவு மற்றும் ரவை ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
- பின் அதில் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
- அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், மிளகுத் தூள் மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளைச் சேர்க்கவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ரவா தோசை மாவு பதத்திற்கு மிகவும் நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் தோசை மொறுமொறுப்பாக வராது.
- இறுதியாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். கல் நன்றாகச் சூடானதும் மாவை ஓரங்களில் இருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும்.
- தோசையைச் சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். ஒரு பக்கம் வெந்தாலே போதுமானது, திருப்பிப் போடத் தேவையில்லை.