திருப்பதி: திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக "வெங்கடாத்ரி (Venkatadri)" எனும் புதிய டிஜிட்டல் வழிகாட்டி செயலியை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி இன்று முதல் செயல்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அது போல் திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இந்தியாவிலேயே பணக்கார கோயில் என்ற பெருமை உண்டு. அது போல் இங்கு பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு சர்வ தரிசனம், ரூ 300 தரிசனம், திவ்ய தரிசனம், சேவாக்கள் என நிறைய வகையில் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம். இந்த கோயிலுக்கு வடமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வருகிறார்கள். சில நேரங்களில் இலவச தரிசனத்தில் (சர்வ தரிசனம்) 24 முதல் 48 மணி நேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலை உள்ளது. அந்த வகையில் திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது புரட்டாசி மாதம் என்பதாலும் பிரம்மோற்சவம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் வருகை திருப்பதிக்கு தருகிறார்கள். திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் "வெங்கடாத்ரி" டிஜிட்டல் வழிசெலுத்துதல் மற்றும் பக்தர்களுக்கான உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெங்கடாத்ரி செயலி பக்தர்கள் திருமலையில் வழி கண்டறியவும், அத்தியாவசிய வசதிகளை அடையாளம் காணவும் உதவும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த செயலியில் 24 மணி நேரமும் செயற்கை நுண்ணறிவு குரல் வழி உதவியாளர் மூலம் வழிகாட்டப்படும். இணையதள வசதி இல்லாத நேரத்திலும் பயன்படுத்தலாம். இந்த செயலியில் கோயில் வளாகம், வணிக வளாகங்கள், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், தரிசன நுழைவுவாயில்கள், பக்தர்களுக்கான உதவி மையங்கள், தேவஸ்தான அலுவலகங்கள், விசாரணை மையங்கள், உடைமை வைப்பகங்கள், இலவச காலணி பாதுகாப்பு மையங்கள், குடிநீர் மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், கழிப்பிடங்கள், அறை ஒதுக்கீட்டு மையங்கள், மொட்டை அடிக்கும் இடங்கள், உணவகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 25 வகையான பிரிவுகளின் கீழ் 350-க்கும் மேற்பட்ட இடங்கள் வரைப்படத்தில் உள்ளன. திருப்பதியில் கார் அல்லது பைக் உள்ளிட்ட வாகனத்தை பார்க் செய்து விட்டு அந்த ஆப் மூலம் மார்க் மை ஸ்பாட் என பதிவிட்டால் நாம் செல்ல வேண்டிய இடமெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் மார்க் மை ஸ்பாட் என்பதை அழுத்தினால் நமது வாகனம் எங்கிருக்கிறது என்பதை கண்டறியலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.