தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உலக புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நாளை இரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறும்.
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்திஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கர்நாடக மாநிலம், மைசூரில் எப்படி தசரா விழா பிரபலமோ அது போல் தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்திலும் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவையொட்டி கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, முருகன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகிறார்கள். 8ஆம் நாளான நேற்று காலை முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதியுலா நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இந்த சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அப்போது அம்மன், சிம்ம வாகனத்தில் வந்து மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். நாளை மறுநாள் புதன்கிழமை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளுவார். அவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். அதிகாலை 3 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணி அளவில் கோயிலுக்கு வருவார். இதையடுத்து 4.30 மணிக்கு மேல் காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும் வியாழக்கிழமை அன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடைபெறும். சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று காலை முதலே தமிழகம் மட்டுமல்லாமல் மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குலசேகரபட்டினத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். மகிஷாசுரன் என்ற எருமை முகம் கொண்ட அசுரன், பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் புரிந்து "ஒரு பெண்ணை தவிர வேறு யாராலும் தனக்கு மரணமே ஏற்படக் கூடாது" என்ற வரத்தை பெற்றான். இதனால் ஆணவத்தில் ஆடிய மகிஷன், தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து, மூவுலகயும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். நாளுக்கு நாள் அசுரனின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் முறையிட்டனர். உடனே பராசக்தி, அசுரனை அழிக்க நவதுர்க்கை வடிவங்களை எடுத்து 9 நாட்கள் போரிட்டு 10 ஆம் நாளான விஜயதசமி நள்ளிரவில் மகிஷாசுரனை வதம் செய்தாள். இதன் வெற்றியாக கொண்டாடப்படும் நிகழ்வே சூரசம்ஹார நிகழ்வாகும். இந்த நிகழ்வு உலகளவில் விசேஷம். விழாவுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள் டிவிகளில் பார்த்து விழாவை கண்டுகளிப்பது வழக்கம்.சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம் முடிந்தவுடன்...
காப்பு களைதல்
அம்மனே மாறுவேடத்தில் தர்மம் கேட்டாரா? மைசூருக்கே டஃப்.. தூத்துக்குடி குலசை தசராவின் ஆச்சரிய பின்னணி
சூரசம்ஹாரத்தின் பின்னணி