Navratri: நவராத்திரி விழா! அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளித்த மதுரை மீனாட்சி!

  • மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா 2-ம் நாளையொட்டி அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்தில் அன்னை மீனாட்சி காட்சியளித்தார். இதையொட்டி திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Advertisement

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக். 11-ஆம் தேதி தொடங்கி, அக். 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான அக். 11ஆம் தேதி, அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    Advertisement

    இரண்டாம் நாளான நேற்று அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து அக். 13-ஆம் தேதி மூன்றாம் நாள் கோலாட்டம், அக். 14-ஆம் தேதி நான்காம் நாள் பட்டாபிஷேகத் திருக்கோலம், அக். 15-ஆம் தேதி ஐந்தாம் நாள் தபசு அலங்காரம், அக். 16-ஆம் தேதி ஆறாம் நாள் ஊஞ்சல் உற்சவம், அக். 17-ஆம் தேதி ஏழாம் நாள் முத்தங்கி சேவை, அக். 18-ஆம் தேதி எட்டாம் நாள் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம், அக். 19-ஆம் தேதி ஒன்பதாம் நாள் சிவபூஜை அலங்காரம் ஆகியவற்றில் அன்னை மீனாட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அக். 20-ஆம் தேதி விஜயதசமி விழாவுடன் நவராத்திரி திருவிழா நிறைவடைகிறது.

    Advertisement

    நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

    மேலும், நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ அன்னை மீனாட்சிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    நவராத்திரியின் முதல் 9 நாட்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மும்மூர்த்திகளையும் தேவியின் 9 அவதாரங்களான ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சுந்திரமண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய வடிவங்களை மக்கள் வழிபடுகிறார்கள். தமிழகத்தில் நவராத்திரியின் போது வீடுகளில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு தாம்பூலம் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருப்பொருளை வைத்து கொலு பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம்.

    மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகள் கழித்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை, புனித நீர் தெளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. கும்பாபிஷேகத்திற்கு பின்னர் இந்த நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.