சென்னை: வரலட்சுமி விரதம் நாளை கொண்டாடப்படும் நிலையில் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் அம்பாளை எந்த நேரத்தில் அழைக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞன மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: ஆடி மாதத்தில்தான் வரலட்சுமி விரதம் வரும் என சொல்வார்கள். ஆனால் இந்த முறை ஆவணியில் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாட ஒரு கணக்கு இருக்கிறது. அதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி அமாவாசைக்கு பின்பு உள்ள ஸ்வரமண மாதத்தில் வரக் கூடிய பவுர்ணமி என்று வருகிறதோ அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில்தான் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையில் 27ஆம் தேதி பவுர்ணமி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை 21 ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. ஆவணி 4ஆம் தேதி நவமி திதியில் வரலட்சுமி நோன்பு வருகிறது. அன்றைக்கு சாமி கும்பிடுவோர் அவரவர் வழக்கப்படி கும்பிடலாம். ஒரு வேளை முந்தைய நாளே அம்மனை அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் இன்றைய தினம் காலை 10.40 மணியில் இருந்து 11.40 மணிக்குள் அம்மனை அழைக்கலாம். இல்லாவிட்டால் இன்று மாலை 6 மணிக்கு மேல் அழைக்கலாம். வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்த வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் அம்பாளை அழைக்கலாம். காலை 9 மணி முதல் 10.20 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பூஜை செய்து நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம். மாலை நேரத்தில் வழிபடும் பழக்கம் கொண்டவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம். வரலட்சுமி பூஜை என்றாலே எளிமைதான்! ஆடம்பரமாக செய்ய வேண்டியதில்லை. பித்தளை அல்லது செம்பு குடத்தில் அரிசி, மஞ்சள் கிழங்கு, நாணயங்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் தேங்காய் வைத்து எளிய முறையில் கலசம் வைக்கலாம். கலசம் அமைக்க இயலாதவர்கள் மகாலட்சுமி படத்திற்கு சந்தனம், குங்குமமிட்டு பால், பழம் நெய்வேத்தியம் செய்து வழிபட்டாலே பரிபூரண அருள் கிடைக்கும். விரத நாளில் கணபதி வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து பெரியவர்களிடம் ஆசி பெற்று நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம். வியாழக்கிழமை அம்பாளை அழைத்தால் சனிக்கிழமை புனர் பூஜை செய்ய வேண்டும். அதற்கான நேரம் காலை 7.35 மணி முதல் 9 மணி வரை , அல்லது 10.35 மணி முதல் 12 மணி வரை செய்யலாம். வெள்ளிக்கிழமை அம்பாளை அழைத்து பூஜை செய்திருந்தால், காலை 7 மணி முதல் 9 மணி வரை அல்லது 10 மணி முதல் 11.45 மணிக்குள் புனர்பூஜை செய்யலாம். புனர்பூஜை என்பது வழிபாட்டின் நிறைவாக மறுநாள் காலையில் செய்யப்படும் வழிபாடு. இந்த பூஜையின் போது அம்மனை பாதுகாப்பாக எடுத்து வைப்பர். இவ்வாறு தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். வரலட்சுமி விரதம் அன்று திருமணமான பெண்களை அழைத்து வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்டவைகளை கொடுக்கலாம். வசதி இருந்தால் பிளவுஸ் பிட் அல்லது புடவை கொடுக்கலாம்.