சென்னை: விஜயதசமி நாளை கொண்டாடப்படும் நிலையில் உங்கள் குழந்தைகளுக்கு அ, ஆ, எழுத வைக்கவும், தொழில் தொடங்கவும் நல்ல நேரம் எது என்பதை பார்க்கலாம். அது போல் அந்த நல்ல நேரத்தில் பள்ளிகளிலும் குழந்தைகளை சேர்க்கலாம்.
நவராத்திரியின் 10ஆவது நாள் விழா நாளை கொண்டாட்டப்படுகிறது. நவராத்திரி 9 நாட்கள் நடைபெறும் விழாவாகும். துர்க்கை, லட்சுமி, பார்வதி ஆகியோர் 3 சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை வதம் செய்து அதில் பெற்ற வெற்றியைத்தான் விஜயதசமியாக கொண்டாடி வருகிறோம்.
விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த காரியமும் வெற்றி பெறும் என்பதால்தான் இந்த நாளில் புதிய தொழில் தொடங்குவது, புதிய வகுப்புகளில் சேருவது, குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது, வித்யாரம்பம், விளையாட்டு கலைகளை கற்கத் தொடங்குவது உள்ளிட்டவை செய்யப்படுகிறது. அது போல் விஜயதசமி நாளில் பல்வேறு நிறுவனங்களில் புதிய கணக்குகளும் தொடங்குவார்கள். இந்த நாளில் குழந்தைகளுக்கு முதற்கல்வியை தொடங்கினால் அவர்கள் வாழ்க்கையில் அறிவுக் கூர்மையுடன் இருந்து வெற்றி வாகை சூடுவர் என்பது நம்பிக்கையாகும். நாளை ஐயப்பன் கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பெரிய தாம்பாள தட்டில் அரிசி அல்லது நெல்மணிகளை பரப்பி வித்யாரம்பம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் விஜயதசமியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம். காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையும், மதியம் 1.35 மணி முதல் 2.55 மணி வரையும், மாலை 4.35 மணி முதல் 5.35 மணி வரையும் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் நேரம் பார்க்க தேவையில்லை. சரஸ்வதி பூஜை அல்லது ஆயுதபூஜையை இன்று கொண்டாட இயலாதவர்களை நாளை மேற்கண்ட நேரத்தில் செய்யலாம்.