சென்னை: ஆடிக் கிருத்திகை எப்போது வருகிறது? வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி விரதம் இருப்பது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம். இதில் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 6 ஆம் தேதியா அல்லது 7ஆம் தேதியா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதையும் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே அம்மனுக்கு கூழ் வார்த்தல், குலதெய்வ வழிபாடு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு உள்ளிட்டவை முக்கியமானவையாகும்.
இதில் முருகனுக்கு விசேஷமான ஆடிக் கிருத்திகை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்க்கலாம். இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: ஆடி மாதத்தில் விநாயகர், சிவன், பெருமாள் ஆகியோருடன் முருகப்பெருமானை வழிபடுவதும் நல்லதாகும். அந்த வகையில் ஆடிக் கிருத்திகை எப்போது வருகிறது என்பதை பார்க்கலாம். கார்த்திகை நட்சத்திரம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.18 மணிக்கு பிறக்கிறது. இது அடுத்த நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை 4.51 மணிக்கு முடிகிறது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை கார்த்திகை நட்சத்திரம் தொடங்குவதால் பெரும்பாலான கோயில்களில் அன்றைய தினமே ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வீட்டில் படைப்பவர்களுக்கு உங்களுக்கு ஏற்ற நாளில் கொண்டாடலாம். பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் விரதம் இருந்தால் வேலைவாய்ப்பு, தொழில் உயர்வு, குழந்தை பாக்கியம், திருமணம் உள்ளிட்டவை கை கூடும். ஆடிக் கிருத்திகை நாளில் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் உள்ளிட்டவைகளை பாராயணம் செய்யலாம். ஆடி கிருத்திகையின் போது முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது, பால் குடம் ஏந்துவது உள்ளிட்டவைகளை செய்வதுண்டு. கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சரவணபவ என நட்சத்திர கோலமிட்டு அதில் சரவணபவ என எழுதி 6 அகல்விளக்குகளை ஏற்றி வழிபடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆடிக் கிருத்திகைக்கு படையல் இட விரும்புவோர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் படைக்கலாம். இது தவிர ராகு காலம், எமகண்டத்தை தவிர மற்ற நேரங்களில் மாவிளக்கு போட்டு படைக்கலாம். உங்கள் ஊரில் ஆடிக் கிருத்திகை நாளில் எந்த மாதிரியான விசேஷம் இருக்கும் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!