சியாட்டில்: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தான் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோனை வெளியிடும். அதன்படி இந்தாண்டு செப். 9ம் தேதி புதிய சாதனங்களை வெளியிட போகிறது. இந்தாண்டு ஐபோன் லைன் அப்பில் மிக பெரிய மாற்றமாக ஐபோன் ஃபோல்ட் எனப்படும் மடிக்கக்கூடிய ஐபோன் வரவுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மிக பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய ஆப்பிள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள ஆப்பிளின் நிகழ்வில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் உடன் இந்த மடிக்கக்கூடிய ஐபோனும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த மடிக்கக்கூடிய Foldable போன் பெயர், சிறப்பம்சங்கள் அல்லது விலை குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த மொபைல் iPhone Fold அல்லது iPhone அல்ட்ரா என அழைக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், இந்த மடிக்கக்கூடிய ஐபோனின் ஆரம்ப விலை 2,000 டாலர்களுக்கும் அதிகமாக இருக்கலாம். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு இது விற்கப்படும் என தெரிகிறது. அதேநேரம் மிக மெல்லிய டிசைனை உருவாக்க ஆப்பிள் சில முக்கிய அம்சங்களில் சமரசம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.. குறிப்பாக ஐபோன் 18 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும்போது, சில அம்சங்கள் இந்த மடிக்கக்கூடிய ஐபோனில் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மடிக்கக்கூடிய ஐபோனில் பேஸ் ஐடி இடம்பெறாமல் போகலாம் என சொல்லப்படுகிறது. இந்த மொபைல் முழுமையாக திறக்கப்படும்போது சுமார் 4.5 மிமீ தடிமன் மட்டுமே கொண்டிருக்கும். இதனால் ஆப்பிளின் பேஸ் ஐடி வேலை செய்ய தேவையான ட்ரூடெப்த் கருவிகளை பொருத்துவதற்கு போதிய இடம் இருக்காது என தெரிகிறது. இதற்கு மாற்றாக ஆப்பிள் மீண்டும் சட் ஐடியை கொண்டுவரலாம் என கூறப்படுகிறது. மேலும் வழக்கமான ஹோம் பட்டனுக்கு பதிலாக, பக்கவாட்டில் பவர் பட்டனில் கைரேகை சென்சார் பொருத்தப்படலாம். சில ஐபேட் மாடல்களில் இந்த முறை இருக்கும் நிலையில், இந்த ஐபோனிலும் இதே முறை கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் பேஸ் ஐடி பயன்படுத்தி வரும் நிலையில், இது முக்கிய மாற்றமாக இருக்கும். கேமரா விஷயத்திலும் மடிக்கக்கூடிய ஐபோன் பின்தங்க வாய்ப்புள்ளது. லீக் மற்றும் டம்மி மாடல்களின் அடிப்படையில் பார்த்தால் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மட்டுமே இடம்பெறலாம் என தெரிகிறது. அதில் 48 மெகாபிக்சல் வைட் கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா இடம்பெறலாம். இருப்பினும் டெலிபோட்டோ லென்ஸ் இருக்காது என கூறப்படுகிறது. இதுவும் கூட ஐபோன் மெலிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்படும் மாற்றமாகும். மடிக்கக்கூடிய ஐபோனில் 5.5 இன்ச் அளவிலான வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் 7.8 இன்ச் அளவிலான உட்புற டிஸ்ப்ளே இடம்பெறும் என தெரிகிறது. வெளிப்புற திரையை வைத்தே அனைத்து பணிகளையும் நாம் செய்ய முடியும். விரிக்கும்போது கிடைக்கும் பெரிய திரை வீடியோ பார்ப்பது, மல்டி டாஸ்கிங் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். மேலும், மற்ற நிறுவனங்களின் மடிக்கக்கூடிய போன்களை போல இல்லாமல் கச்சிதமான வடிவத்தை இது கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எவ்வளவு முறை மடித்தாலும் டிஸ்ப்ளேவுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் வால்யூம் பட்டன்கள் சாதனத்தின் மேல் விளிம்பில், வலதுபுறத்துக்கு அருகில் அமைக்கப்படும் என தெரிகிறது. இடதுபுற விளிம்பில் எந்தவொரு பட்டனும் இருக்காதாம். மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே என்பதால் உள்ளே இருக்கும் எலக்டிரானிக் பாகங்களின் இடமும் மாறி இருக்கிறது. இதனால் பட்டன்கள் அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் சமீப காலங்களாக தனது ஐபோனில் பொருத்தும் ஆக்ஷன் பட்டன் இதில் இருக்காது எனவும் சொல்லப்படுகிறது. இதில் மிக முக்கிய விஷயமே இதில் சிம் போட முடியாதாம். eSIM மட்டுமே போட முடியுமாம்.ஐபோன் ஃபோல்ட்
பேஸ் ஐடி இல்லை
டெலிபோட்டோ கேமரா இல்லை
சிம் கார்ட் கூட போட முடியாது