இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு

  • சென்னை: டிஜிட்டல் அரெஸ்ட், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் மிரட்டல் அழைப்புகள் மூலம் முதியவர்களைக் குறிவைத்து அரங்கேறி வரும் சைபர் மோசடிகளை முறியடிக்க, ஜம்மு-காஷ்மீர் போலீசார் புதிய 'டூயல் ஓடிபி சிஸ்டம்' (Dual OTP System) என்ற வங்கிப் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது மோசடிகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் சைபர் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் வயதானவர்களைக் குறிவைத்தே இந்த சைபர் மோசடிகள் நடக்கும். வீட்டில் உள்ள முதியவர்களுக்கு போன் செய்து ஏதேதோ கதை சொல்லி பணத்தைத் திருடிவிடுவார்கள். வயதானோரை இந்த மோசடிகளில் இருந்து காப்பாற்ற காஷ்மீர் போலீசார் புதிய நடைமுறையைக் கொண்டு வருகிறார்கள். அதுதான் டூயல் ஓடிபி சிஸ்டம்.

    Advertisement

    ஓடிபி

    வழக்கமாக நாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது நம்முடைய மொபைல் எண்ணுக்கு ஒரே ஒரு ஓடிபி மட்டுமே வரும். ஆனால், இந்த புதிய டூயல் ஓடிபி சிஸ்டத்தில் கூடுதலாக ஒரு பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

    முதல் ஓடிபி: பணப் பரிவர்த்தனை செய்யும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதியவரின் மொபைல் எண்ணுக்கு முதல் அனுப்பப்படும்.

    இரண்டாவது ஓடிபி: அதேபோல அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அவரது நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நாமினியின் மொபைல் எண்ணுக்கு இன்னொரு ஓடிபி அனுப்பப்படும்.

    ஏன் பாதுகாப்பானது

    இந்த இரண்டு வெவ்வேறான ஓடிபி எண்களையும் வங்கி பக்கத்தில் உள்ளீடு செய்து வெரிஃபை செய்தால் மட்டுமே அந்தப் பணப் பரிவர்த்தனை முழுமையடையும். மேலும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்தால், அதுகுறித்த அலர்ட் மெசேஜ்களும் குடும்பத்தினருக்கு அனுப்பப்படும்.

    Advertisement

    சைபர் குற்றவாளிகள் எப்போதும் முதியவர்களிடம் ஒருவிதப் பயத்தையும், அவசரத்தையும் செயற்கையாக உருவாக்கி பணத்தைப் பறிப்பார்கள். தங்களை போலீஸ் அதிகாரிகளாகவோ அல்லது வங்கி மேலாளர்களாகவோ காட்டிக் கொண்டு பணத்தை உடனடியாக அனுப்பச் சொல்லி மிரட்டுவார்கள். ஆனால், இந்த இரட்டை ஓடிபி அதை முடக்கிவிடும். உடனடியாகப் பணம் அனுப்பச் சொல்லி அவசரத்தை உருவாக்க முடியாது.

    ஏமாற்ற முடியாது

    மேலும், மோசடி ஆசாமிகள் முதியவர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் முதல் ஓடிபி-யைப் பெற்றாலும், குடும்ப உறுப்பினரிடம் இருக்கும் இரண்டாவது ஓடிபி இல்லாமல் கணக்கிலிருந்து ஒரு பைசாவைக் கூட திருட முடியாது. இந்த இரட்டை ஓடிபி இருப்பதால்.. ஏமாற்றி பணம் பறிக்கும் அந்தக் கும்பலின் முயற்சியைக் குடும்பத்தினரால் தடுக்க முடியும். அதற்கான சரியான ஒரு கால அவகாசம் கிடைக்கிறது.

    Advertisement

    போலீசார் அறிவுறுத்தல்கள்

    • வீட்டில் இருக்கும் முதியவர்களுக்குத் தினசரி நடக்கும் புதிய சைபர் மோசடிகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.. எந்தவொரு சூழலிலும் ஓடிபி அல்லது வங்கி விபரங்களை யாருக்கும் பகிரக் கூடாது என்று அறிவுறுத்துங்கள்.
    • வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகள் உள்ள வங்கிக் கிளைகளை நேரில் தொடர்பு கொண்டு, இந்த 'டூயல் ஓடிபி' பாதுகாப்பு வசதி தங்களின் கணக்கிற்குப் பொருந்துமா என்பதைச் சரிபார்த்து உடனடியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    • ஒருவேளை நீங்கள் சைபர் மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணையோ அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    English Summary

    To counter rampant digital arrest and financial frauds targeting the elderly, a new Dual OTP System(வங்கியின் இரட்டை ஓடிபி சிஸ்டம் எப்படி வேலை செய்யும்): All things to know about Dual OTP System.