மனிதர்களை காலி செய்யும் ஏஐ.. இன்னும் 4 ஆண்டுகளில் நடக்க போகும் மாற்றம்! அடித்து சொல்லும் எலான் மஸ்க்


  • சியாட்டில்: ஏஐ சார்ந்த ஆய்வுகள் உலகெங்கும் வேகமெடுத்துள்ள சூழலில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு கருத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் ஒட்டுமொத்த அறிவையும் விட ஏஐ அதிக புத்திசாலித்தனம் கொண்டதாக மாறிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    இன்றைய தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. நாம் கற்பனை கூட செய்ய முடியாத வேகத்தில் ஏஐ துறையில் ஆய்வுகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 4 ஆண்டுகளில் ஏஐ அதிக புத்திசாலித்தனம் கொண்டதாக மாறிவிடும் என்றும் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் ஒட்டுமொத்த அறிவையும் விட ஏஐ அதிக அறிவு கொண்டதாக மாறிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    ஏஐ தொழில்நுட்பம்

    தொழிலதிபர் பீட்டர் எச். டயமண்டிஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் போட்ட ஒரு போஸ்ட்டிற்கு பதிலளிக்கும் போதே எலான் மஸ்க் இந்த கருத்தைக் கூறியிருந்தார். அதாவது மனிதக்குலத்தின் எதிர்கால வளர்ச்சி என்பது அதிகப்படியான கம்ப்யூட்டர் திறன் மற்றும் ஆற்றலால் மட்டும் வருவதில்லை.. மாறாக மனிதர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் தேவையான கருவிகளைப் பெறுவதாலேயே அமையும் என்று டயமண்டிஸ் குறிப்பிட்டிருந்தார். அதாவது மனிதனின் எதிர்கால வளர்ச்சி என்பது அவர்கள் பயன்படுத்தும் கருவிகளையும் பொறுத்தது என்று கூறியிருந்தார்.

    இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், மனித ஆற்றலை விட AIன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்னும் சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த மனித இனத்தின் கூட்டு அறிவுத் திறனை விஞ்சிவிடும் என்பது மஸ்க்கின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. அதேநேரம் இது போன்ற ஒரு காலக்கெடுவை மஸ்க் குறிப்பிடுவது இது முதல் முறையல்ல.

    Advertisement

    எலான் மஸ்க்

    ஏஐ வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது தொடர்பாக எலான் மஸ்க் மிகவும் துல்லியமான சில கணிப்புகளை வைத்துள்ளார். இந்தாண்டே ஏஜிஐ எனப்படும் மனிதனைப் போலவே சிந்திக்கக்கூடிய ஏஐ உருவாகிவிடும் என்று அவர் கருதுகிறார். 2027ம் ஆண்டிற்குள் ஒரு தனிமனிதனை விட ஏஐ புத்திசாலியாக இருக்கும் என்றும் 2030 அல்லது 2031ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் அறிவையும் சேர்த்தால் எவ்வளவு இருக்குமோ, அதைவிட ஏஐ அதிக ஆற்றல் கொண்டதாக மாறும் என்றும் அவர் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதை அவர் 'செயற்கை சூப்பர் நுண்ணறிவு' என்று அழைக்கிறார்.

    Advertisement

    தற்போது ஓபன் ஏஐ, கூகுள், மெட்டா, ஆந்த்ரோபிக் மற்றும் எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ (xAI) போன்ற நிறுவனங்கள் மிகத் தீவிரமாக ஏஐ மாடல்களை உருவாக்கி வருகின்றன. இந்த அமைப்புகள் ஏற்கனவே கம்ப்யூட்டர் கோட்களை எழுதுவது, கட்டுரைகளை உருவாக்குவது, ஆராய்ச்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கடினமான பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. இதற்காகப் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டு, பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களும் ஏஐ சிப்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பல நாட்டு தலைவர்கள் நினைப்பதை விட மிக வேகமாக நடந்து கொண்டிருப்பதாக எலான் மஸ்க் கூறுகிறார்.

    Advertisement

    இயந்திரங்களே எல்லாம் செய்யும்

    எலான் மஸ்க்கைப் பொறுத்தவரை, இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார். குறிப்பாக உற்பத்தி, போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை ஏஐ மூலம் இயங்கும் இயந்திரங்களே செய்யும். மனிதர்கள் செய்யும் கடினமான வேலைகளை இயந்திரங்கள் எடுத்துக் கொள்ளும்போது, பொருட்களின் உற்பத்திச் செலவு குறையும். இதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் மிக மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கும் ஒரு சூழல் உருவாகும்.

    ஆப்டிமஸ்

    டெஸ்லா நிறுவனத்தின் ஆப்டிமஸ் எனப்படும் மனித உருவ ரோபோக்கள் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மஸ்க் நம்புகிறார். மின்சாரக் கார்களை தயாரிப்பதை விட இந்த ரோபோக்களை உருவாக்குவதே டெஸ்லாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலைகள் முதல் வீடுகள் வரை ஆபத்தான மற்றும் சலிப்பான வேலைகளை இந்த ரோபோக்கள் செய்யும். இந்த ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாராளமாக வழங்கும்.. ஒரு புதிய யுகத்தைப் படைக்கும் என்பதே மஸ்க்கின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது.

    English Summary

    Tech billionaire Elon Musk shared his visionary outlook on Artificial Superintelligence(செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொடர்பாக எலான் மஸ்க்): AI Will Outsmart Combined Human Intelligence says Elon Musk.