மீண்டும் உயரும் ரீசார்ஜ் கட்டணங்கள்? டேட்டாவுக்கு வருது தனி கட்டணம்? ஜியோ, ஏர்டெல், VI புது கணக்கு

  • சென்னை: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் செல்போன் மூலமாகவே இணையச் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே விரைவில் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும் கட்டண உயர்வு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே சொல்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது மொபைல் கட்டணங்களை உயர்த்தக்கூடும் என்ற தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் மறைமுகமாகப் பல கட்டண உயர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் கட்டண உயர்வா எனப் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    Advertisement

    ரீசார்ஜ் திட்டம்

    கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் தான் மொபைல் பிளான்களின் விலையில் ஒரு பெரிய விலை உயர்வு செய்யப்பட்டது. இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் கட்டண உயர்வு வரும் என்றே சந்தை வல்லுநர்கள் கணித்திருந்தனர். இருப்பினும், தற்போது உலக அளவில் நிலவும் சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, இந்த கட்டண உயர்வை உடனடியாக அமல்படுத்த நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

    குறிப்பாக, வளைகுடாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக ஏற்கனவே எரிபொருள், உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. இது சாமானிய மக்களின் பாக்கெட்டை பதம் பார்த்து வருவதால், இந்த நேரத்தில் கட்டணத்தை உயர்த்தினால் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என நிறுவனங்கள் கருதுகின்றன.

    Advertisement

    எவ்வளவு உயரும்?

    அதேநேரம் அடுத்த முறை கட்டண உயர்வு அமலுக்கு வரும்போது அது சுமார் 15% வரை இருக்கலாம் என்கிறார்கள். அதாவது தற்போது நீங்கள் 1.5GB டேட்டாவுடன் கூடிய 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு பிளானை ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால், அதன் விலை தோராயமாக ₹50 வரை அதிகரிக்கக்கூடும். இது தவிர, 5G சேவைகளுக்கான பிரத்தியேக கட்டணங்களும் அறிமுகப்படுத்தப்படலாம். தற்போது 5G சேவை இலவசமாக வழங்கப்படும் நிலையில், அதற்குத் தனி கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

    கட்டணம்

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏன் விலையை உயர்த்த நினைக்கின்றன என்பதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது 2025 நிதியாண்டில் 13% ஆக இருந்த வருவாய் வளர்ச்சி, 2026 நிதியாண்டில் 10% ஆகக் குறைந்தது. 2026 மார்ச் காலாண்டில் இது வெறும் 7% ஆக மட்டுமே இருந்தது. வருவாய் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திற்குச் செல்லும்போது, நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம். அதேபோல ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிப்பது நிறுவனங்களுக்கு மிக முக்கியம். 2026 நிதியாண்டில் ₹220ஆக இருக்கும் ARPUஐ 2027ல் ₹230 ஆக உயர வேண்டும் என்றால் கட்டண உயர்வு அவசியம்.

    Advertisement

    மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பங்குச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது. பங்குச்சந்தையில் நுழையும்போது நல்ல லாபத்தைக் காட்ட வேண்டும். EBITDA சிறப்பாக இருக்க வேண்டும். எனவே, பங்குச்சந்தையில் நுழைவதற்கு முன்பு ஒரு கட்டண உயர்வு வரலாம் என்கிறார்கள். இரண்டு ஆண்டு என்ற கணக்குப்படி பார்த்தால் ஜூலை முதல் வாரத்தில் கட்டண உயர்வு வர வேண்டும். ஆனால், ஏற்கனவே விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டண உயர்வு கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

    புதிய முறை

    அடுத்த முறை வரும் கட்டண உயர்வு வெறும் விலை உயர்வாக மட்டும் இருக்காது. ஒரு புதிய கட்டண முறையைக் கூட நிறுவனங்கள் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது யார் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை வரலாம். அதாவது, குறைந்த டேட்டா பயன்படுத்துபவர்களுக்குக் குறைவான விலையும், அதிக டேட்டா மற்றும் 5G சேவைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படலாம்.

    Advertisement

    இந்த காலத்தில் மொபைல் என்பது இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த 15% கட்டண உயர்வு நுகர்வோருக்குச் சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    English Summary

    Indian telecom giants Reliance Jio, Bharti Airtel, and Vodafone Idea are expected to increase mobile tariff plans(இந்தியாவில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரலாம்): Mobile recharge plans might raise latest news in tamil.