ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா


  • சென்னை: இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் ஒரு கிளிக் செய்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருக்கும் தகவலும் நொடிப் பொழுதில் கண்முன் வந்துவிடுகிறது. பலர் இன்டர்நெட் என்பது செயற்கைக்கோள் வழியாக வானத்திலிருந்து நம் மொபைலுக்கு வருகிறது என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகளாவிய இணையத் தொடர்பில் 99 சதவீதம் கடலுக்கு அடியில்தான் இயங்குகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பலரும் நினைப்பது போல அது சாட்டிலைட் விட்டு சாட்டிலைட் பாயாது. மாறாக அந்தத் தகவல் முதலில் உங்கள் பகுதியில் உள்ள மொபைல் டவருக்கு செல்லும். அங்கிருந்து பூமிக்கடியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியாகக் கடற்கரையில் உள்ள மிக முக்கியமான லேண்டிங் ஸ்டேஷன்களுக்கு அந்த சிக்னல் விரைவாகப் பாய்கிறது.

    Advertisement

    மும்பை, சென்னை

    இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தான் இணையத்தின் முக்கிய நுழைவாயில்கள். கடலுக்கு அடியில் ஆயிரக்கணக்கான மைல் நீளத்திற்கு விரிக்கப்பட்டுள்ள தடிமனான கேபிள்கள் இங்கிருந்து தான் உலக நாடுகளுடன் நம்மை இணைக்கின்றன. இந்த கேபிள்கள் மனித முடியை விட மெல்லிய கண்ணாடி இலைகளால் உருவாக்கப்பட்டவை என்றாலும், அவை மிக வலிமையானவை. மேலும், அதற்குப் பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கும்.

    இந்த ஃபைபர் ஆப்டிக் கேபிள்களுக்குள் தகவல்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றன. கடலடியில் இவை சுமார் 8,000 முதல் 10,000 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு மெல்லிய நூல் போன்ற கண்ணாடி இழை வழியாக நொடிக்குப் பல டெராபைட் டேட்டாவை அனுப்ப முடியும் என்பதுதான் இதில் இருக்கும் டெக்னாலஜி ரகசியம்.

    Advertisement

    சுறா மீன் கடித்தால் இன்டர்நெட் கட் ஆகுமா?

    இந்தக் கேள்வியைச் சிரிப்பாகப் பார்த்தாலும் இது ஒரு உண்மையான சவாலாகும். கடலடியில் இருக்கும் கேபிள்களை சுறா மீன்கள் கடிப்பது அல்லது கப்பல்களின் நங்கூரங்கள் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். கேபிள்கள் முதலில் போடப்பட்ட காலத்தில் அதற்கு இவ்வளவு பாதுகாப்பு இருக்காது. இதனால் சுறா கடி சம்பவங்கள் அடிக்கடி நக்கும். ஆனால், இப்போது இதுபோன்ற பாதிப்புளில் இருந்து தப்பிக்க இந்த கேபிள்கள் மீது பல அடுக்கு இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கவசங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

    ஒருவேளை கடலடியில் கேபிள் உடைந்தால், அதை சரி செய்யவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேபிள் ஷிப்புகள், இணைய கேபிள்களுக்கான மெக்கானிக் என சொல்லலாம், கடலில் சுற்றி வருகின்றன. ரோபோக்கள் உதவியுடன் கடலடியில் உடைந்த பகுதியைத் தேடிக் கண்டுபிடித்து அவை உடனடியாக ஒட்டப்படுகின்றன. இந்த வேலைகள் நடக்கும்போது கூட நமக்கு இன்டர்நெட் வேகம் குறையாமல் இருக்க மாற்றுப் பாதைகளில் டேட்டா திருப்பப்படுகின்றன.

    Advertisement

    சாட்டிலைட்

    இவ்வளவு பிரச்சினை என்றால் சாட்டிலைட் மூலமாகவே இணைய சேவையை பெறலாமே என்ற கேள்வி உங்களுக்கு வரும். உண்மையில் சாட்டிலைட் மூலம் இணையத்தைப் பெறுவது அதிக செலவு பிடிக்கும். மேலும், டேட்டா வேகம் குறைவாக இருக்கும். வானிலை போன்ற காரணங்கள் வேகத்தை குறைக்கும். மேலும், விண்வெளிக்குச் சென்று சிக்னல் மீண்டும் பூமிக்கு வர எடுக்கும் நேரத்தை விட, கடலடியில் ஒளியின் வேகத்தில் தகவல்கள் செல்வது மிக விரைவானது. ஆன்லைன் கேமிங் மற்றும் வீடியோ கால்களுக்கு இந்த வேகம் மிகவும் அவசியமாகும்.

    தனியார் நிறுவனங்கள்

    எதிர்காலத் தேவைகளுக்காக கூகுள், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் சொந்தமாகவே கடலடியில் புதிய கேபிள்களைப் பதித்து வருகின்றன. இப்போது நீங்கள் ஒரு வீடியோவைப் பார்க்கும்போது அல்லது ஒரு செய்தியை படிக்கும்போது அது கடல் தாண்டி ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து உங்கள் கைக்கு வந்துள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த கண்ணுக்குத் தெரியாத தொழில்நுட்பமே இன்றைய டிஜிட்டல் உலகின் முதுகெலும்பாக இருக்கிறது.

    English Summary

    99% of global data travels through undersea fiber optic cables connected via landing stations in Chennai and Mumbai(உலகின் இணையம் வேலை செய்வது எப்படி): All things to know about Undersea Fiber Optic Cables.