சென்னை: நடிகர் பாலா தனது திறமையான நடிப்பால் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ஆவார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் பாலா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களால் இப்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். இவரைச் சுற்றி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கியப் பின்னணி குறித்த முழுமையான இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பாலா,தமிழில் 'அன்பு' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பாலாவுக்கு நல்ல பெயரை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து காதல் கிசு கிசு, கலிங்கா, மஞ்சள் வெயில் போன்ற படங்களில் நடித்த பாலா, தனது சகோதரரும் பிரபல இயக்குநருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த "வீரம்" மற்றும் ரஜினி நடித்த "அண்ணாத்த'" போன்ற படங்களிலும் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து பெரும் கவனம் பெற்றார். பாரம்பரியமிக்க சினிமா பின்னணியைக் கொண்ட பாலா, பிரபல தயாரிப்பாளர் ஏ.கே. வேலனின் பேரன், இயக்குநர் ஜெயகுமாரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஆனால் பாலாவின் தனிப்பட்ட திருமண வாழ்க்கை கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 2008-ல் சந்தனா என்ற பெண்ணை மணமுடித்து 2009-ல் பிரிந்தார். பிறகு 2010-ல் பாடகி அம்ருதாவைத் கல்யாணம் செய்து 2019-ல் விவாகரத்து பெற்றார். 2021-ல் எலிசபெத் என்பவரைத் திருமணம் செய்து 2024-ல் பிரிந்த பாலா, தற்போது கோகிலா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். கேரளாவின் கோட்டயத்தில் வசித்து வரும் பாலா, மனைவி கோகிலாவைச் சட்டப்படி திருமணம் செய்து 2 ஆண்டுகள் ஆகின்றன.. இந்நிலையில்,நடிகர் பாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.. இதுதான் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. அந்த வீடியோவில் பாலா பேசுபோது, "கடந்த 10 ஆண்டுகளாக நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். சட்டத்தின் பெயரால் ஒரு ஆண் துன்புறுத்தப்படுகிறான். யாரால் என்று அவர்களது பெயரை நான் சொல்ல முடியாது. அவர்கள் எதையும் சொல்லலாம். நான் ஒரு ஆண். என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் ஒரு ஆண், நான் எதுவும் சொல்லக்கூடாது. எவ்வளவு சோகம் இருந்தாலும், அதை மனதில் வைத்துக்கொண்டு புன்னகைக்க வேண்டும், சரிதானே? ஊடகங்கள் நல்ல காரியங்களைச் செய்கின்றன. பல உண்மைகளை வெளியே கொண்டு வருகின்றன. அதே நேரம் சில பொய்களையும் அவை வியூஸூக்காகவும் செய்கின்றன. அப்படியான ஊடகங்களையே ஏமாற்றும் ஒருவர் கேரளாவில் இருக்கிறார் தெரியுமா? இனி என்னை யாராவது துன்புறுத்தினால் நான் பெரிய செய்தியாளர் சந்திப்பு நடத்துவேன். எல்லா உண்மைகளையும் வெளிப்படையாகப் பேசுவேன். உண்மைகளைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இதற்கு பேசாமல் எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்" இவ்வாறு பாலா உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது வைரலாக பரவியதால், ரசிகர்களும் பொதுமக்களும் அவரது மனநிலை குறித்து கவலை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.. இதனால் இந்த சர்ச்சை மேலும் அதிகமாகிவிடவும், வைக்கம் சிவன் கோவிலில் இருந்து நேரலையில் தோன்றி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் பாலா. அப்போது அவர் மீண்டும் சொன்னதாவது, "நான் நல்லா இருக்கிறேன். நானும் என் மனைவியும் சந்தோஷமாக இருக்கிறோம். சிலர் பழைய விஷயங்களை மனதில் வைத்து திருப்பி திருப்பி சிலர் தாக்குகிறார்கள். சட்ட விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குறாங்க. நான் தீவிரவாதி கிடையாது. நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு 8 வருடங்களுக்கு பிறகு இப்போது ஏன் பிரச்சனை வருகிறது? நான் ஒரு கார் வாங்கினால், என் மனைவிக்கு பரிசு கொடுத்தால் கூட வழக்கு வருமா? நான் கோழை கிடையாது. சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன். முன்னாள் மனைவியான பாடகி அம்ருதாவுடன் விவாகரத்து வழக்கு முடிந்துவிட்ட நிலையில், அவர் மீண்டும் கோர்ட் மூலம் தொடர்பு கொண்டு ரூ.120 கோடி கேட்கிறார். டைவர்ஸ் முடிந்து பல வருடம் முடிந்து, இப்போது ஏன் திடீரென இவ்வளவு பெரிய தொகையை கேட்க வேண்டும்? அதைதான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . நிலைமை இப்படியே நீடித்தால் நானும், என் மனைவியும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம், நானும் என் குழந்தையும் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று அன்று சொல்லிவிட்டு போன அம்ருதா, இப்போது எதற்காக 120 கோடி ரூபாய் கேட்கிறார்? நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சாகக் கிடந்த சமயத்தில், கொஞ்சம் உயிர் பிழைத்து வந்தவுடனேயே என் கையில் இருந்த 10 லட்ச ரூபாயை மகள் பெயரில் டெபாசிட் செய்தேன். எனக்கு இப்போது தேவை நிம்மதி மட்டும்தான்" என்றெல்லாம் பாலா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். பாலாவின் இந்த குற்றச்சாட்டும், கண்ணீர் வார்த்தைகளும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஒட்டுமொத்த சட்டப் போராட்டங்களும் பண நெருக்கடிகளுமே பாலாவை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது கேரளா, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல நடிகர் பாலா வீடியோ
நடிகர் பாலா கண்ணீர்
விஷம் வைத்து கொன்னுடுங்க
பாடகி அம்ருதா
120 கோடி ரூபாய்