நான் இப்போ அரசியலில் இல்லை.. விஜய் பற்றிய கேள்வி, திடீரென சரத்குமாரின் மாற்றம்! பின்னணி?

  • சென்னை: நடிகர் சரத்குமார் அரசியலில் இருந்து விலகி விட்டாரா? என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் நாகர்கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அரசியல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டபோது, நான் அரசியலில் தற்போது இல்லை, ஒதுங்கி இருக்கிறேன் என்று சரத்குமார் கூறியிருக்கிறார். அதுவும் விஜய் தலைமையிலான தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்விக்கு தான் இந்த பதில் வந்திருக்கிறது.

    Advertisement

    முதல்வர் விஜய் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு சரத்குமார், அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் அரசியலில் இல்லைங்க, ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். மேலும் தமிழக அரசின் செயல்பாடு குறித்து பேசுவதற்கு தனது மாநில தலைவர் இருக்கிறார். அவர்தான் பதில் சொல்வார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

    Advertisement

    அரசியலில் இருந்து விலகிய சரத்குமார்

    இப்படி சரத்குமார் நான் அரசியலில் இல்லை என்று வெளிப்படையாக பேசியது தான் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் பற்றிய கேள்விகளுக்கு விஜயை அதிகமாக விமர்சனத்தவர்களில் சரத்குமார் ஒருவர். விஜயால் ஜெயிக்கவே முடியாது என்று சொன்னார். பிறகு அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கூட அதிகமான விமர்சனங்களை வைத்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் கூட விஜய்யை இன்னும் அரசியல்வாதியாக நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

    சரத்குமாரின் திடீர் மாற்றம்

    ஆனால் இப்போது திடீரென்று அரசியல் பற்றிய கேள்விக்கு சரத்குமாரின் இந்த மாற்றம் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே பாஜகவில் தனது சொந்தக் கட்சியை இணைத்து கொண்டு பல வருடங்கள் ஆன பிறகும் இன்னும் அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கவில்லை. இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என அவரே சில பேட்டிகளில் சொல்லியிருந்தார். தன்னுடைய தொண்டர்களும் தன்னிடம் கேள்வி கேட்பதாக அவர் கூறியிருந்தாலும் இன்னும் அவருக்கு எந்த பதவியும், பொறுப்பு கொடுக்கவில்லை. அந்த அதிருப்தியில் தான் சரத்குமார் இதுபோல பேசுகிறாரா? அல்லது விரைவில் பாஜகவில் இருந்து சரத்குமார் விலகி தவெக கட்சியில் இணைக்க போகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

    Advertisement

    சரத்குமாரின் அரசியல் பயணம்

    சரத்குமார் 1996ல் திமுகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார். அதற்கு பிறகு அதிமுகவில் இருந்து இருந்தார். 2007 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி பல வருஷங்கள் தனியாக அரசியல் செய்து வந்தார். அதற்கு பிறகு 2024 தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். கடந்த மார்ச் மாதத்தில் கூட பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை, எனக்கும் ஆதரவாளர்களுக்கும் இதுவரை பதவி வழங்கப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார்.

    பொறுப்பு இல்லை

    பின்னர் கட்சி தலைமையிடம் தனக்கு ஒரு பொறுப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து செய்திகள் வெளியாகன. 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை, என்னை நம்பி வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அதற்கான காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். இப்போது அவரே நான் அரசியலிலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று சொல்லி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    The question of whether actor Sarathkumar has stepped away from politics has now arisen. This follows a remark he made at an event in Nagercoil; when reporters asked him about politics—specifically regarding the performance of the current Tamil Nadu government led by Vijay—he stated that he is not currently involved in politics and has stepped aside.