நடிகை சிவரஞ்சினியின் மகள் ஹீரோயினாக அறிமுகம்! பிரபல தயாரிப்பு நிறுவனம் கொடுத்த வாய்ப்பு

  • சென்னை: 90ஸ் காலத்தில் தமிழ் படங்களைப் பார்த்தவர்களுக்கு நடிகை சிவரஞ்சினியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தலைவாசல், சின்ன மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்த இவரை இப்போதைய ரசிகர்களுக்கு அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இப்போது சிவரஞ்சினியின் மகள் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகப் போகிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அதுவும் சாதாரணமாக ஒரு படத்தில் அறிமுகமாகவில்லை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.

    Advertisement

    சிவரஞ்சினி தமிழ் படங்களில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தினார். அங்கு நடிகை ஊஹா என்ற பெயரிலும் பிரபலமனார். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிறகு, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். இவர்களுக்கு ரோஷன், ரோஹன் என்ற இரண்டு மகன்களும், மேதா என்ற மகளும் இருக்கிறார்கள்.

    Advertisement

    நடிகை சிவரஞ்சனி மகள்

    இதில் மூத்த மகன் ரோஷன் ஏற்கெனவே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்போது மகள் மேதாவும் சினிமாவில் நடிக்க வருகிறார். இதனால் சிவரஞ்சினியின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகை உருவாகிறார் என்று சொல்லலாம்.

    ஹீரோயினாக அறிமுகமாகும் மேதா

    மேதா மேகா கதாநாயகியாக நடிக்கும் புதிய தெலுங்குப் படத்தின் பூஜை தற்போது நடைபெற்றிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரித்வி வனம் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் ஜெய் ஜஸ்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் பிரபலமான பாடலாசிரியர் ராமஜோகையா சாஸ்திரியின் மகன் சாய் ஹர்ஷா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

    Advertisement

    புதிய நடிகர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே இப்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏனென்றால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு சினிமாவில் பல பெரிய படங்களைத் தயாரித்த நிறுவனம். அந்த நிறுவனத்தின் படத்தில் மேதா அறிமுகமாக இருப்பதால், அவருடைய முதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    சிவரஞ்சினியின் மகள் என்பதால் மேதாவுக்கு சினிமா குடும்பத்தின் பின்னணி இருக்கிறது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகுதான் ரசிகர்கள் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தெரியும். அம்மா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இப்போது மகள் தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

    Advertisement

    நடிகைகளின் வாரிசு

    சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாவது புதிதல்ல. ஆனால், ஒவ்வொருவருக்கும் முதல் படம் என்பது முக்கியமானது. அந்தப் படத்தின் கதை, நடிப்பு, ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு எனப் பல விஷயங்கள்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தீர்மானிக்கும். அந்த வகையில் மேதா மேகாவுக்கும் இது முக்கியமான தொடக்கம். அம்மா சிவரஞ்சினி நடித்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்போது மகள் நடிக்க வருவதால், சிவரஞ்சினியின் பழைய ரசிகர்களும் மேதா எப்படி நடிக்கிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கலாம்.

    படத்தின் பெயர், மற்ற நடிகர்கள், வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இப்போதைக்கு படத்தின் பூஜை நடைபெற்றிருப்பதும், மேதா கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்பதும்தான் வெளியாகியிருக்கும் முக்கியமான தகவல். அம்மாவைப் போலவே மகளும் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Actress Sivaranjani daughter makes her debut as a lead actress! Opportunity offered by a prominent production house