சென்னை: சில புகைப்படங்கள் பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் கதையை தெரிந்து கொண்ட பிறகுதான் அதன் மதிப்பு புரியும். இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இயக்குநர் ஏ.எல். விஜய் - முதல்வர் விஜய் சந்திப்பு புகைப்படமும் அப்படித்தான்.
"Time To Lead" என்று எழுதப்பட்ட 'தலைவா' படத்தின் போஸ்டரை பிரேம் செய்து, முதல்வர் விஜய்க்கு ஏ.எல். விஜய் பரிசாக கொடுத்திருக்கும் அந்த ஒரு புகைப்படத்தை ரசிகர்கள் சாதாரண கிப்டாக பார்க்கவில்லை. "13 வருடக் காத்திருப்புக்கு கிடைத்த பதில்" என்று பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
தலைவா பட பிரச்சனை
2013-ல் வெளியான 'தலைவா' படம் நினைவிருக்கிறதா? படம் ரிலீஸாகும் முன்பே எல்லோரும் கதையைப் பற்றி பேசவில்லை. ஒரே ஒரு வரியைப் பற்றித்தான் பேசினார்கள். "Time To Lead." அந்த நான்கு வார்த்தைகள்தான் அப்போது தமிழ்நாடு முழுக்க அரசியல் சர்ச்சையை கிளப்பியது.
அந்த காலகட்டத்தில் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு ஏற்கனவே இருந்தது. அதனால், "Time To Lead" என்பது ஒரு சாதாரண டேக்லைன் இல்லை... அரசியலுக்கு அனுப்பிய சிக்னல் என்று பலரும் எடுத்துக் கொண்டார்கள்.
அதன் பிறகு நடந்தது எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத வரலாறு. ரிலீஸ் ஆக வேண்டிய நாளில் படம் வெளியாகவில்லை. திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் வந்ததாக தகவல்கள் வெளியானது. பல திரையரங்குகள் படத்தை திரையிட தயங்கின. விஜய் வெளியிட்ட அந்த எமோஷனலான வீடியோ இன்னும் ரசிகர்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறது. "என்னுடைய படத்தை வெளியிட உதவி செய்யுங்கள்" என்று அப்போதைய முதல்வரிடம் அவர் வைத்த கோரிக்கை, அந்த காலத்தில் பெரிய விவாதமாக மாறியது. கடைசியில் இரண்டு வாரங்கள் தாமதமாக படம் வெளியானது. ஆனால் அதற்குள் ஒரு மாற்றம் நடந்திருந்தது. "Time To Lead" என்ற டேக்லைன் அமைதியாக நீக்கப்பட்டிருந்தது. அந்த நான்கு வார்த்தைகள் அப்போது சர்ச்சையாகிப் போனது. ஆனால் இன்று? அதே வாசகம் மரச்சட்டத்தில் பிரேம் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் கைகளில் இருக்கிறது. அதனால்தான் இந்த புகைப்படம் ரசிகர்களை அதிகமாக நெகிழ வைத்திருக்கிறது. பலரும், "அன்று போஸ்டரில் இருந்த வாசகம்... இன்று வாழ்க்கையில் நடந்துவிட்டதே!" என்று பதிவிட்டு வருகின்றனர். சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேலே போய், "இது ஒரு கிப்ட் இல்லை... 2013-க்கு 2026 கொடுத்த பதில்" என்றும் எழுதி வருகிறார்கள். இந்த சந்திப்பில் அரசியல் பேச்சு நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் ஏ.எல். விஜய் தேர்வு செய்த அந்த பரிசு மட்டும் நிறைய விஷயங்களை பேசிவிட்டதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். 'தலைவா' படத்தை இயக்கிய ஏ.எல். விஜய்க்கும், நடிகர் விஜய்க்கும் எப்போதுமே நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பின் நினைவாக இந்த பரிசு கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் மறைந்திருக்கும் அரசியல் குறியீட்டை சமூக வலைதளங்கள் விடவில்லை. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே, "அன்று மீம்ஸ்களில் ஓடிய 'Time To Lead'... இன்று உண்மையிலேயே Time To Lead ஆகிவிட்டது" என்ற வாசகத்துடன் ஆயிரக்கணக்கான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் அந்த பழைய போஸ்டரையும், இப்போது ஏ.எல். விஜய் கொடுத்த பரிசையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள். "வரலாறு சில நேரங்களில் திரும்பி வராது... முழுசாக நிறைவேறும்" என்ற கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. அரசியலாக பார்த்தாலும், சினிமாவாக பார்த்தாலும், 'Time To Lead' என்ற நான்கு வார்த்தைகள் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு காலத்தை நினைவுபடுத்தும் அடையாளமாக மாறிவிட்டது. அந்த நினைவையே பரிசாக மாற்றி முதல்வர் விஜய்யிடம் கொடுத்த ஏ.எல். விஜயின் இந்த செயல், இப்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.நீக்கப்பட்ட வார்த்தை
விஜய் வெளியிட்ட வீடியோ
இயக்குனர் விஜய் கொடுத்த கிப்ட்
தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா.. முதல்வர் விஜய் பதவி கொடுக்க இதுதான் காரணம்!
ரசிகர்கள் கருத்து