சென்னை: ஆர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'அனந்தன் காடு' திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மலையாள இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யாவுடன் இந்திரன்ஸ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான இந்த படம், போரை மையமாகக் கொண்ட ஆக்ஷன் டிராமாவாக வெளியாகியது.
ஆர்யாவின் கடந்த சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், 'அனந்தன் காடு' அவருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில்தான் ரசிகர்கள் இருந்தனர். குறிப்பாக 'மிஸ்டர் எக்ஸ்' படத்துக்குப் பிறகு ஆர்யாவுக்கு மிகவும் முக்கியமான ரிலீஸாகவே இந்த படம் பார்க்கப்பட்டது.
ஆனால் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதிலும் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம்தான் தற்போது அதிகம் பேசப்படுகிறது. அவர் தனது விமர்சனத்தில், "இலங்கை போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலை மையமாக வைத்து ஒரு முக்கியமான கதையை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த கதைக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யவில்லை. இப்படியொரு சீரியஸ் கதையை எடுத்துவிட்டு, அதை ஜெய்சங்கர் காலத்து படங்கள் போல ஜிகினா வேலை பார்த்து எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க எந்த இடத்திலும் யதார்த்தம் தெரியவில்லை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், "போர்க்கள காட்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையின் பார்வையாளர்களிடம் சென்று சேரவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வந்த படம், சாதாரண ஆக்ஷன் படமாக மாறிவிட்டது. திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் எந்த புதுமையும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், "இந்த படத்தை பார்க்கும் போது, மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற 'கம்மாட்டிப்பாடம்' உள்ளிட்ட சில படங்களின் சாயல் அதிகமாக தெரிகிறது. ஆனால் அந்த படங்களின் தரத்திற்கு கூட இது நெருங்கவில்லை. காப்பி அடித்த உணர்வுதான் அதிகம் வருகிறது" எனவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். இறுதியாக, "இது ஒரு போர் திரைப்படமாகவும் முழுமையாக வேலை செய்யவில்லை; அதே நேரத்தில் நல்ல கமர்ஷியல் படமாகவும் இல்லை. மொத்தத்தில் இது ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தரவில்லை" என்று கூறி, ஆர்யாவின் சமீபத்திய தோல்விப் பட்டியலில் 'அனந்தன் காடு' படமும் இணைந்துவிடும் என்று கணித்துள்ளார். இதற்கு முன்பும் 'நூறு சாமி' படத்தை கடுமையாக விமர்சித்திருந்த ப்ளூ சட்டை மாறன், இந்த முறையும் தனது வழக்கமான பாணியில் அனந்தன் காடை விமர்சித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தை இயக்கியுள்ள ஜியேன் கிருஷ்ணகுமார், இதற்கு முன்பு 'ரன் பேபி ரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அந்த படமும் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் கவர முயன்றார். ஆனால் முதல் நாள் விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுபக்கம், சில ரசிகர்கள் படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் போர்க்கள காட்சிகளை பாராட்டி வருகிறார்கள். ஆர்யாவின் நடிப்பும் பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் கருத்துகள் வெளியாகின்றன. ஆனால் மெதுவான திரைக்கதை மற்றும் எமோஷனல் தாக்கம் குறைவாக இருந்ததால் படம் அனைவரையும் கவரவில்லை என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. இதனால், "ஆர்யாவுக்கு இது இன்னொரு பின்னடைவா? இல்லை வார இறுதி வசூல் படத்தின் நிலையை மாற்றுமா?" என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் எழுந்துள்ளது. முதல் நாள் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு, வார இறுதியில் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தே 'அனந்தன் காடு' படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் பயணம் எப்படி அமையும் என்பது தெரியவரும்.அனந்தன் காடு விமர்சனம்
திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்... ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது
ரசிகர்கள் கருத்து
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்