சினிமாவில் பட்ட அவமானம்.. அந்த” முடிவெடுக்க நினைத்தேன்! கஷ்டமான கட்டத்தை பகிர்ந்த அர்ஜுன்


  • சென்னை: தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக தனக்கென தனி அடையாளம் உருவாக்கியவர் நடிகர் அர்ஜுன். பல வருடங்களாக திரையுலகில் நிலைத்து நிற்கும் அவர், நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 'ஆக்ஷன் கிங்' என்ற பட்டத்தை ரசிகர்கள் அன்போடு கொடுத்தது சும்மா அல்ல; அதற்கு பின்னால் பல ஆண்டுகளாக அவர் காட்டிய உழைப்பும், கட்டுப்பாடும், திரை அர்ப்பணிப்பும் இருக்கிறது.

    Advertisement

    ஆனால் இன்று வெற்றிகரமாகத் தெரியும் இந்த பயணத்தின் பின்னால் மிகக் கடுமையான போராட்டம் இருந்ததாக சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

    Advertisement

    நடிகர் அர்ஜுன் பேட்டி

    சினிமாவில் வெற்றி, தோல்வி இரண்டும் சாதாரணம் தான். ஆனால் சில தோல்விகள் ஒருவரின் தொழில் வாழ்க்கையை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையையும் புரட்டி போடக்கூடும். அப்படிப்பட்ட காலகட்டத்தை தான் அர்ஜுனும் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் பேசிய அவர், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகள் தன்னை மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிட்டதாக உருக்கமாக கூறியுள்ளார்.

    அவர் பேசும்போது, "ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்கள் சரியாக போகவில்லை. அதனால் மிகப்பெரிய பைனான்ஸ் பிரச்சனை வந்தது. என்னிடம் இருந்த சொத்துக்களையே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பாதித்த பணம் எல்லாமே போய்விட்டது. அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அர்ஜுன் நடித்த முடிவு

    அதிலும் அவர் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "எனக்கு நன்றாக கார் ஓட்டத் தெரியும். அதனால் நடிப்பை விட்டுவிட்டு டிரைவராக வேலைக்குப் போய்விடலாமா என்று கூட தீவிரமாக யோசித்தேன்" என்ற அவரது வார்த்தைகள், வெற்றியின் பின்னால் இருக்கும் வேதனையை வெளிப்படுத்துகின்றன.

    இன்று 'ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒருவர் கூட ஒரு கட்டத்தில் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலையை நினைத்திருக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    அர்ஜுனின் பயணம்

    அர்ஜுனின் சினிமா பயணம் சாதாரணமானது அல்ல. கன்னட சினிமா பின்னணியில் இருந்து வந்த அவர், தமிழ் சினிமாவில் தன்னுடைய தனி இடத்தை கடுமையான உழைப்பால் பிடித்தவர். ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், முதலவன், ரிதம் போன்ற படங்கள் அவரை முன்னணி நடிகராக உயர்த்தின. குறிப்பாக தேசபக்தி, நேர்மையான அதிகாரி, ஆக்ஷன் ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் ரசிகர்கள் அவரை அதிகமாக விரும்பினர்.

    Advertisement

    ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக இருந்த அர்ஜுனுக்கு பின்னர் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் அவருடைய கேரியரில் சரிவு ஏற்பட்டது. ஆனால் அதிலும் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை என்பதையே அர்ஜுன் மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

    அர்ஜுன் நெகிழ்ச்சி

    "அத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ரசிகர்கள் என்னை விடவில்லை. 'நீங்க ஒரு நல்ல படம் கொடுத்தா நாங்க பார்க்க தயாரா இருக்கோம்'ன்னு சொன்னார்கள். அந்த நம்பிக்கையே என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது" என்று அவர் கூறியுள்ளார்.

    அந்த ரசிகர் ஆதரவு தான் அவரை மீண்டும் திரையுலகில் நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் குணச்சித்திர வேடங்கள், முக்கிய கதாபாத்திரங்கள், வில்லன் ரோல்கள் என தனது பயணத்தை மாற்றிக்கொண்ட அர்ஜுன், இன்றும் பிசியான நடிகராகவே இருக்கிறார்.

    Advertisement

    ஒரு பெரிய நட்சத்திரம் கூட வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் டிரைவராக வேலை பார்க்க நினைத்திருக்கிறார் என்ற இந்த தகவல், வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை எப்போதும் நேரான பாதை அல்ல என்பதை நினைவுபடுத்துகிறது. தற்போது அர்ஜுனின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Veteran actor Arjun has shared an emotional account of one of the most difficult phases in his career, revealing that repeated film failures once pushed him into severe financial trouble. Known as Tamil cinema’s “Action King,” Arjun said there was a time when he had to sell his assets and felt completely lost about his future. In a shocking revelation, he admitted that he even seriously considered quitting acting and working as a driver, since he knew how to drive well. However, the unwavering support from fans helped him regain confidence and rebuild his career. Today, Arjun continues to remain active in cinema through diverse roles, proving resilience in the face of adversity.