நேற்று இரவு 11 மணி வரை என்னிடம் பேசினார்... அப்போது சொன்ன விஷயம் - பாக்யராஜை நினைத்து உடைந்த சினேகன்


  • சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அந்த காயம் இன்னும் ஆறாத நிலையில், அவரது சீடர்களில் ஒருவராக இருந்து பின்னர் தனக்கென ஒரு பேரரசை உருவாக்கிய பாக்யராஜின் மறைவு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக கவிஞர் சினேகன் தனது மனைவி கன்னிகாவுடன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகள் அங்கிருந்தவர்களையே கலங்க வைத்தன.

    Advertisement

    கவிஞர் சினேகன் பேச்சு

    "நேற்று இரவு 11 மணி வரைக்கும் பாக்யராஜ் சார் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், அதற்கான சில விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார் 'நாளைக்கு காலையில் நேரில் சந்திப்போம்'ன்னு சொல்லிட்டு போனை வைத்தார். ஆனால், இன்று அவரை இப்படிப் பார்க்க வேண்டிய நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை." என்று உருக்கமாக கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இப்பதான் பாரதிராஜா சார் நம்மை விட்டு போனார். அந்த சோகம் இன்னும் எங்க மனசுல இருந்து போகவில்லை. அவருடைய நினைவுகளே இன்னும் நம்மை விட்டு விலகவில்லை. அதற்குள் அவருடைய அன்பு சீடரான பாக்யராஜ் சாருக்கும் இப்படியொரு நிலைமை வந்திருப்பது நம்ப முடியாத வேதனை." என்றார்.

    Advertisement
    கடைசியாக பாக்யராஜ் முகத்தை கூட பார்க்க முடியல.. அவருக்கா இப்படி ஒரு மரணம் வரணும்? கதறி அழுத கலா மாஸ்டர்

    குடும்ப உறுப்பினர்

    பாக்யராஜ் தங்களுக்கு வெறும் சினிமா பிரபலமல்ல என்றும், குடும்ப உறுப்பினர் போன்றவர் என்றும் சினேகன் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

    "எங்கள் குடும்பத்தில் எந்த நல்ல விஷயம் நடந்தாலும் முதலில் நினைவுக்கு வருபவர் பாக்யராஜ் சார்தான். என் புத்தக வெளியீட்டு விழா முதல், வாழ்க்கையில் நான் எடுக்கும் பல முக்கிய முடிவுகள் வரை அவரிடம் ஆலோசனை கேட்பேன். அவர் ஒரு மூத்த இயக்குநர் மட்டுமல்ல... எனக்கு ஒரு நல்ல குரு. தவறு இருந்தால் திருத்துவார், நல்லது இருந்தால் பாராட்டுவார். அந்த அன்பு இனிமேல் கிடைக்காது என்பதுதான் என்னால் தாங்க முடியாத வேதனை." என்று கூறியபோது அவரது குரல் தழுதழுத்தது.

    Advertisement
    பாக்யராஜ் கடைசியாக போன் செய்து தழுதழுத்த குரலில் கேட்ட விஷயம்.. நம்ப முடியல! கண்கலங்க பேசிய டி ராஜேந்தர்

    பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி

    சில நாட்களுக்கு முன்புதான் பாரதிராஜாவின் இறுதி அஞ்சலியிலும் பாக்யராஜ் நேரில் கலந்து கொண்டு கண்ணீருடன் தனது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார். அப்போது அவருடன் பலரும் நீண்ட நேரம் பேசி, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில் சோகத்துடன் இருந்த பாக்யராஜ், சில நாட்களிலேயே இப்படி உயிரிழந்திருப்பது திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    வழக்கம்போல அதிகாலையில் நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பிய அவர், திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

    Advertisement

    ரசிகர்கள் வருத்தம்

    பாக்யராஜின் மறைவு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவருடன் பல ஆண்டுகள் பயணித்த திரைப்பிரபலங்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சினேகன் கூறிய "நேற்று இரவு 11 மணி வரை என்னிடம் பேசினார்... இன்று காலையில் உடலாக பார்த்தேன்" என்ற வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

    பாரதிராஜாவை இழந்த சோகத்தில் இருந்து தமிழ் சினிமா இன்னும் மீளாத நிலையில், அவரின் திறமையான சீடரான பாக்யராஜையும் இழந்தது திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

    English Summary

    K. Bhagyaraj: Lyricist Snehan paid an emotional tribute to legendary filmmaker K. Bhagyaraj, revealing that they had spoken over the phone until 11 PM on the night before the director's sudden demise. Their conversation revolved around the upcoming Writers' Association election and plans to meet the following morning. Expressing his grief, Snehan described Bhagyaraj as more than a filmmaker, calling him a mentor and a family member who guided him through important moments in life. His heartfelt words have deeply moved fans and members of the Tamil film industry, who are still mourning the recent loss of Bharathiraja.