சென்னை: தமிழ் சினிமா இன்று ஒரு பொற்கால நட்பின் முடிவை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது ஆருயிர் நண்பரும் இசைஞானியுமான இளையராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தருணம் பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இளையராஜா, சில நிமிடங்கள் அமைதியாக நின்று தனது நண்பனை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்கள் முன்பு பேசிய சில வார்த்தைகளே தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
செய்தியாளர்கள் இளையராஜாவிடம் கருத்து கேட்டபோது, குரல் தழுதழுக்க அவர் கூறியதாவது, "பேசுவதற்கு ஒன்னும் இல்லை... இதில் என்ன இருக்கு? நண்பன் பாரதிராஜா... இந்த உலகத்தை விட்டு போயிட்டாரு. அவருடைய உயிர் நல்லபடியாக இளைப்பாறணும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அது தவிர வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை." என்று கூறி இருக்கிறார். இந்த ஒரு வரியே இளையராஜாவின் மனநிலையை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதன்பிறகு அவர் மேலும் பேசும்போது, "எனக்கு மக்கள் எல்லோரும் எந்த அளவிற்கு பிடிக்குமோ... எந்த அளவிற்கு முக்கியமோ... அதே அளவிற்கு என்னுடைய நண்பன் பாரதிராஜாவும் எனக்கு முக்கியம். எனக்கு மரியாதை கொடுக்கிற மக்கள், பாசம் காட்டுற ரசிகர்கள், நண்பர்கள்... எல்லாருமே ஒன்னுதான்." என்று கூறினார். இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இளையராஜாவும் பாரதிராஜாவும் வெறும் சினிமா நண்பர்கள் அல்ல. தேனி மாவட்டத்தின் மண் வாசனையை சுவாசித்து வளர்ந்த இருவரும், சினிமா கனவுகளுடன் சென்னை வந்தவர்கள். சினிமாவில் வாய்ப்புக்காக போராடிய காலங்களில் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே கனவை பகிர்ந்து கொண்டவர்கள். பாரதிராஜா இயக்குநராக வேண்டும் என்று கனவு கண்டார். இளையராஜா இசையமைப்பாளராக வேண்டும் என்று போராடினார். அந்த போராட்ட காலங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்ததாக பலமுறை கூறியுள்ளனர். 1977-ம் ஆண்டு வெளியான "16 வயதினிலே" திரைப்படம் தமிழ் சினிமாவின் பாதையையே மாற்றியது. இயக்குநராக பாரதிராஜா, இசையமைப்பாளராக இளையராஜா. அந்த ஒரு படம் மட்டுமல்ல, அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே என எண்ணற்ற படங்களில் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத படைப்புகளை கொடுத்தனர். இன்று கூட தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பாரதிராஜா பட பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் இசைதான். பாரதிராஜா மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட இரங்கல் கவிதையில், "நீ தூரிகை... நான் வண்ணம்... நான் தூரிகை... நீ வண்ணம்..." என்று எழுதியிருந்தார். அதேபோல் ரசிகர்கள் தற்போது, "பாரதிராஜா காட்சிகளை உருவாக்கினார்... இளையராஜா அதற்கு உயிர் கொடுத்தார்" என்று பதிவிட்டு வருகின்றனர்.இளையராஜா பேட்டி
ரசிகர்களும் முக்கியம்
தேனி மண்ணில் தொடங்கிய நட்பு
தமிழ் சினிமாவை மாற்றிய கூட்டணி
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு
வைரமுத்து சொன்ன வார்த்தைகள்