சென்னை: தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற அந்த மகத்தான கலைஞர் இனி நம்மிடையே இல்லை என்ற உண்மை, பலராலும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
பாரதிராஜாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இரங்கல் அலை எழுந்தது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான தேனியில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் பொதுமக்கள் முதல் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் வரை பலரும் கலந்துகொண்டு கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த அறிக்கையில், தனது குடும்பத்தின் துயர நேரத்தில் உடனிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கணவரின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறப்பு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், இறுதி நிகழ்வுகளை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அரசு அதிகாரிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றியை பதிவு செய்துள்ளார். அதோடு, நேரிலும் சமூக வலைதளங்களிலும் ஆறுதல் தெரிவித்த மக்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இந்த துயர நேரத்தில் தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதன் மறைந்த பிறகும் அவரது சாதனைகள், அவர் விதைத்த அன்பு, அவர் உருவாக்கிய உறவுகள் உயிருடன் இருப்பதை பாரதிராஜாவின் இறுதி நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. அவரது படைப்புகள் வாழும் வரை அவர் மறைய மாட்டார் என்பதே ரசிகர்களின் உணர்வாக உள்ளது. இயக்குநர் பாரதிராஜா இந்த மண்ணில் கலந்துவிட்டாலும், அவர் காட்டிய கிராமத்து பாதைகள், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், அவர் சொல்லிய மனித உணர்வுகள் தமிழ் சினிமா இருக்கும் வரை தலைமுறைகளை கடந்து பேசிக்கொண்டே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் நன்றிக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது மனதையும் உருக்கி வருகிறது. பலரும் பாரதிராஜாவின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.பாரதிராஜா மனைவி அறிக்கை
மறையாத புகழ்
ரசிகர்கள் ஆறுதல்