சென்னை: நடிகர் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்த உமாசங்கரி சோசியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை உருக வைத்திருக்கிறது. புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அவர் தன்னம்பிக்கையாக அந்த பதிவில் சில வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கவலையோடு கேட்டு வருகின்றனர்.
நடிகை உமா சங்கரி யார் என்று இன்றைய தலைமுறையிடம் கேட்டால் சிலருக்கு உடனடியாக நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கை என்று சொன்னால் 90ஸ் மற்றும் 2000 ரசிகர்களுக்கு அந்த முகம் சட்டென நினைவுக்கு வந்துவிடும். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த உமாசங்கரி பிறகு திடீரென சினிமாவில் இருந்து விலகினார்.
அவரை சினிமாவில் இப்போது பார்க்க முடியலையே என்று தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது அவருடைய உடல்நிலை குறித்து தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உமா சங்கரியின் அம்மாவும் பிரபலமான நடிகை தான். அதுவும் 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சுமித்ரா தான். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் சுமித்ரா நடித்திருந்தார். சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சுமித்ரா பிறகு அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு அஜித் நடித்த வலிமை படத்தில் கூட முக்கிய கேரக்டரில் சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சுமித்ராவின் மகள் உமா சங்கரி மற்றும் நக்ஷத்ரா. மூத்த மகள் உமா சங்கரி வீர நடை படம் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து வானவில், கடல் பூக்கள் சொக்கத்தங்கம், சூரி, தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது சொக்கத்தங்கம். அந்த படத்தில் விஜயகாந்தின் தங்கச்சி மரகதம் கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல தங்கர் பச்சானின் தென்றல், கடல் பூக்கள் படத்திலும் ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்திருந்தார். சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் கடந்த 2006 ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களை விட்டு விலகிய அவர் வள்ளி என்ற சீரியலிலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் சினிமா மற்றும் சீரியல்களில் பெரிதாக நடிக்கவில்லை. இந்த நிலையில் உமா சங்கரி வெளியிட்ட பதிவில் தனக்கு ஆரம்பகட்ட மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் தெரிவித்து இருக்கிறார். தற்போது சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்தையும் எதிர்கொண்டு வருவது குறித்து அந்த பதிவில் கூறியிருக்கிறார். அதில் சில நாட்கள் கடினமாக இருப்பதாகவும் வலிமையாக உணரும் நாட்களை கொண்டாட கற்றுக் கொள்வதாகவும், தன் மீதான அன்பிற்கும் ஆதரவுக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.புற்று நோயுடன் போராடும் நடிகை
நடிகை சுமித்ரா மகள்
நடிகை உமா சங்கரியின் ஆரம்ப காலம்
நடிகை உமா சங்கரி பதிவு