சென்னை: இசையமைப்பாளர் தேவா பாடல்களை பற்றி பேச ஆரம்பித்தால், அவருடைய ஹிட் பாடல்களை மட்டும் சொல்லிவிட்டு நம்மால் கடந்து போய்விட முடியாது. ஏனென்றால், அவருடைய இசை நம்முடைய வாழ்க்கையோடு எந்த அளவுக்குக் கலந்திருக்கிறது என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஒலித்த பாடல், இன்னொரு பக்கம் மதுரை கள்ளழகர் திருவிழாவில் மக்களின் உணர்வோடு கலந்த பாடல், அதேபோல ஆயுத பூஜை வந்துவிட்டால் ஆட்டோக்காரர்கள் கொண்டாடும் பாடல் என்று தேவாவின் இசைக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது.
முதலில், பலரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு ஒரு விஷயம் என்னவென்றால், சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல், சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் அரசு மரியாதையுடனான இறுதி நிகழ்ச்சியில் ஒலித்தது. 2016-ம் ஆண்டு அவர் மறைந்தபோது, அவருக்கு பிடித்தமான இந்த பாடல் இறுதி நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அந்த பாடலுக்கு இசையமைத்தவர் தேவா, வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார், கிருஷ்ணராஜ் பாடியிருந்தார்.
ஒரு தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல், இன்னொரு நாட்டின் முன்னாள் அதிபரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஒலிக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்! அந்த பாடலில் தமிழ்நாட்டின் மண்ணையும் பல பகுதிகளின் தனித்துவத்தையும் இணைக்கும் அழகான கருத்து இருக்கிறது. பல இன மக்களை கொண்ட சிங்கப்பூரின் பன்முகத்தன்மையோடு அந்த பாடல் பொருந்தியதால்தான் அது அந்த நிகழ்வில் முக்கியத்துவம் பெற்றது. தேவாவின் இசை ஒரு படத்துக்குள் மட்டும் நின்றுவிடாமல், ஒரு நாட்டின் நினைவுகூரலிலும் இடம்பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். அடுத்து மதுரை, சித்திரை திருவிழா என்றாலே நம் கண் முன்னால் வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் காட்சி, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு நிற்கும் அந்த கொண்டாட்டம்தான். அந்த சூழலில் "வாராரு வாராரு அழகர் வாராரு" என்ற பாடல் ஒலிக்கும்போது, அந்த திருவிழாவின் உற்சாகமே வேற லெவலுக்கு மாறிவிடும். கள்ளழகர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு இசையமைத்தவர் தேவா. வைரமுத்து வரிகளை எழுதியிருந்தார். தேவாவும் எஸ்.ஏ. ராஜ்குமாரும் பாடியிருந்தார்கள். இந்த பாடல் வெறும் சினிமா பாடலாக மட்டும் ரசிகர்களிடம் நின்றுவிடவில்லை. அழகர் திருவிழாவுடன் தொடர்புபடுத்தி மக்கள் ரசிக்கும் பாடலாகவும் மாறியிருக்கிறது. திருவிழாக்களின் காட்சிகளில் இந்த பாடல் ஒலிப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல், ஒரு ஊரின் திருவிழா உணர்வோடு கலந்துவிடுகிறது என்றால் அதுதான் ஒரு இசையமைப்பாளருக்குக் கிடைக்கும் பெரிய அங்கீகாரம். தேவாவின் இசையில் இருந்த அந்த எளிமையும், மக்களோடு உடனடியாகத் தொடர்பு ஏற்படுத்தும் தன்மையும்தான் இதற்குக் காரணம். இன்னொரு பக்கம், ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா. அதில் வந்த "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" பாடலை யாராவது அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? குறிப்பாக ஆட்டோக்காரர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு இருக்கும் வரவேற்பு தனி. ஆயுத பூஜை வந்துவிட்டாலே ஆட்டோக்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, பூஜை போட்டு, பிடித்த பாடல்களை ஒலிக்கவிட்டு கொண்டாடுவது பல இடங்களில் நாம் பார்க்கும் காட்சிதான். அந்த சமயத்தில் "நான் ஆட்டோக்காரன்" பாடல் ஒலித்தால், அதில் இருக்கும் உற்சாகமே தனி. இந்த பாடலுக்கு தேவா அமைத்த இசை, கானா பாணியின் துடிப்பு, ரஜினியின் ஸ்கிரீன் ப்ரெசென்ட் எல்லாமே சேர்ந்து அதை ஒரு சாதாரணப் பாடலாக இல்லாமல், ஒரு கொண்டாட்டத்தின் அடையாளமாக மாற்றிவிட்டன. சென்னையின் தெருக்களிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் இருந்த கானா இசையைத் திரையுலகில் இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதனால்தான் அவருடைய கானா பாடல்களை ரசிகர்கள் இன்றும் உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள். இன்று தேவா நம்முடன் இல்லை என்ற செய்தியை ஏற்றுக்கொள்வதே பலருக்கும் கடினமாக இருக்கிறது. ஆனால் அவர் இசையமைத்த பாடல்கள் ஒலிக்கும்போது, அவரை நினைவுகூர்வதற்கு நமக்கு ஒரு காரணம் தேவைப்படாது. மதுரையில் அழகர் திருவிழா வந்தாலும் சரி, ஆயுத பூஜையில் ஆட்டோக்கள் அலங்கரிக்கப்பட்டாலும் சரி, பழைய பாடல்களை வானொலியில் கேட்டாலும் சரி, ஏதோ ஒரு தருணத்தில் தேவாவின் இசை நம்மை சந்தித்துக்கொண்டே இருக்கும்.சிங்கப்பூரில் தமிழ் பாட்டு
சித்திரை திருவிழாவில் தேவாவின் பாட்டு
சிங்கப்பூர் முன்னாள் அதிபரை கட்டிப்போட்ட தேவா இசை! சர்வதேச தலைவர்கள் முன் ஒலித்த தஞ்சாவூர் பாடல்
ஆயுத பூஜையில் கொண்டாட்டம்
நீங்காத இசை