ரஜினிக்கு சூப்பர் ஸ்டார்” ஹைப் மியூசிக் கொடுத்த தேவா.. ஜெய்லர் 2லும் தொடரும் அந்த மேஜிக்!

  • சென்னை: ரஜினிகாந்த் என்று சொன்னதுமே அவருடைய ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், அவர் ஸ்கிரீனில் வரும்போது பின்னணியில் ஒலிக்கும் அந்த இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு. அதிலும் 'சூப்பர் ஸ்டார்' என்று வரும்போது ஒலிக்கும் அந்த மியூசிக் கேட்டால், ரசிகர்களுக்கு ஒரு தனி உற்சாகம் வந்துவிடும். அந்த இசையோடு தேவாவின் பெயரும் இன்றைக்கும் சேர்ந்தே நினைவுக்கு வருவது தான் அவருடைய இசைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்.

    Advertisement

    இப்போது தேவா மறைந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், அவர் இசையமைத்த பாடல்களையும், தமிழ் சினிமாவுக்கு அவர் கொடுத்த மறக்க முடியாத இசையையும் பலரும் நினைத்து பார்த்து வருகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த 'சூப்பர் ஸ்டார்' மியூசிக் இப்போதும் ரசிகர்களிடம் அதே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    Advertisement

    சூப்பர் ஸ்டார் மியூசிக்

    குறிப்பாக ஜெயிலர் 2 படத்தில் 'சூப்பர் ஸ்டார்' என்று வரும்போதும் தேவா இசையமைத்த அந்த மியூசிக் பயன்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்றைக்கு ரஜினியின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஆனாலும், ரஜினியின் பெயரையும் அவருடைய சூப்பர் ஸ்டார் அடையாளத்தையும் நினைவுபடுத்தும் அந்த பழைய மியூசிக்கு இன்னமும் தனி இடம் இருக்கிறது. இசையமைப்பாளர்கள் மாறினாலும், ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்த சில இசைகளை மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    தேவா ரஜினி பாடல்கள்

    தேவா ரஜினிக்கு இசையமைத்த படங்களை எடுத்துப் பார்த்தாலே பல ஹிட் பாடல்கள் வரிசையாக நினைவுக்கு வரும். குறிப்பாக வெளியான அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற வந்தேண்டா பால்காரன், வெற்றி நிச்சயம் போன்ற பாடல்கள் உற்சாகம் கொடுக்கும். அதற்குப் பிறகு 1995-ல் வெளியான பாட்ஷா படத்தில் தேவா கொடுத்த இசையும் தனி ரகம். அந்தப் படத்தில் இடம்பெற்ற நான் ஆட்டோக்காரன், ரா ரா ராமையா, ஸ்டைல் ஸ்டைல்தான் போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. இன்றைக்கும் டிவியில் இந்த பாடல்களை கேட்டாலே பழைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறையினரும் ரசிப்பதை பார்க்க முடிகிறது.

    Advertisement

    அருணாச்சலம் படத்திலும் தேவாவின் இசை ரசிகர்களைக் கவர்ந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற மாத்தாடு மாத்தாடு, சிங்கம் ஒன்று உள்ளிட்ட பாடல்களும் ரஜினி ரசிகர்களால் காலத்துக்கும் கொண்டாடப்படுபவை. இப்படி ரஜினியின் படங்களில் தேவா கொடுத்த பாடல்களை பட்டியலிட்டால், ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு காலகட்டத்தின் நினைவுகள் இருப்பதை பார்க்க முடியும்.

    காலத்திற்கும் ஒலிக்கும் இசை

    இந்த பாடல்கள் எல்லாமே தேவாவின் இசையில் ரஜினிக்கு கிடைத்த முக்கியமான பாடல்களில் சில. ரஜினியின் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய பெயர் திரையில் வரும்போது ரசிகர்களிடம் ஏற்படும் அந்த உற்சாகத்துக்கு மியூசிக் ஒரு முக்கியமான காரணம். அந்த வகையில் தேவா உருவாக்கிய இசைக்கு தனி அடையாளம் கிடைத்துவிட்டது.

    Advertisement

    இப்போது ஜெயிலர் 2 படத்திலும் அந்த 'சூப்பர் ஸ்டார்' இசை தொடர்ந்து பயன்படுத்தப்படுவது, தேவாவின் இசை எவ்வளவு காலம் கடந்தும் ரசிகர்களுடன் பயணிக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. ஒரு பாடல் அல்லது இசை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டால், அதை மறக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் ரஜினி போன்ற பெரிய நட்சத்திரத்தின் அடையாளத்தோடு சேர்ந்துவிட்ட இசை என்றால், அதற்கான வரவேற்பு இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். தேவா இப்போது நம்முடன் இல்லை என்றாலும், அவர் இசையமைத்த பாடல்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

    English Summary

    Deva: The moment one mentions Rajinikanth, his signature style, punchy dialogues, and mass-appeal sequences immediately come to mind. However, the background music that plays whenever he appears on screen is also immensely popular among fans. In particular, the musical theme that accompanies the "Superstar" title card never fails to ignite a surge of excitement in the audience. The fact that the name Deva is still inextricably linked to this music—even today—serves as the greatest testament to the recognition his work has earned.