சென்னை: "தனுஷ் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளதால், வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு, ராயன் படத்துக்கு தேசிய விருது முடிவை எடுத்திருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பாக அஜித்துக்கு "பத்மபூஷண்" விருது வழங்கப்பட்டதும் இதுபோன்ற ஒரு அரசியல் கணக்கே" என்று நேர்காணல் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
Kantham meida என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா ஜெயசங்கர், "தேசிய விருதுகளுக்கான படங்களை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவில் (Jury) முழுநேரப் பணியாளர்களோ அல்லது அதிகாரமிக்க IAS, IRS அதிகாரிகளோ இடம்பெறுவதில்லை.
மாறாக சினிமா குறித்த முழுமையான பார்வையும் பழுத்த அனுபவமும் கொண்ட இயக்குநர்கள், மற்றும் நூற்றுக்கணக்கான படங்களைத் தயாரித்த அனுபவமிக்க தயாரிப்பாளர்களையே இந்த குழுவில் நியமிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆய்வு செய்யப்படும் திரைப்படத்தின் மொழி சார்ந்த ஆளுமையும் அவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்வுக்குழு உறுப்பினர்களை அரசியல்வாதிகளும் அமைச்சர்களுமே நியமிக்கிறார்கள்.. இதனால் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களே ஜூரிகளாக வருகின்றனர். அதன் விளைவாக, விருது தேர்விலும் அரசியல் பார்வையே மேலோங்குகிறது. சென்சார் போர்டு மற்றும் தேசிய விருது தேர்வு வாரியம் ஆகிய இரண்டிலுமே அரசியல்வாதிகள் ஊடுருவியுள்ளனர். இதைத் தவிர்க்க 100 படங்களை இயக்கிய அனுபவமிக்க டைரக்டர்கள், கேமராமேன்கள், புரொடியூசர்களை தேர்வு வாரியத்தில் நியமிப்பதே சரியான முறையாகும். தனுஷ் நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் அப்பட்டமான அரசியல் உள்ளது. 'லப்பர் பந்து', 'மெய்யழகன்', 'வேட்டையன்' போன்ற தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், வன்முறை மட்டுமே நிறைந்த 'ராயன்' படத்திற்கு விருது வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூடப்பிறந்த உடன்பிறப்புகளே ஒருவரையொருவர் கொன்று கொள்ளும் முறையற்ற கதையமைப்பை கொண்ட ஒரு சாதாரண கேங்ஸ்டர் படம் அது. தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அசுரன் படத்துடன் ஒப்பிடும்போது 'ராயன்' படத்தில் அவரது நடிப்பில் சிறப்பு எதுவும் இல்லை. கேப்டன் மில்லர் படத்திற்கு வழங்கியிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஏனெனில் அது விடுதலை போராட்டப் பின்னணி கொண்டது. அடுத்த வரும் இட்லி கடை படத்துக்கு விருது கிடைக்கும்போல.. ஆனால் இட்லி கடை படத்துக்கு விருது தந்தால்கூட ஓரளவு நியாயம்.. ஏனென்றால் பாரம்பரிய உணவு, அதை தொழில்ரீதியாக எப்படி என்பதை விவரித்த படம்.. அதனால் விருது தந்தால்கூட ஏற்கலாம். ஆனால் ராயன் எப்படி? தனுஷ் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளதால், வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பாக அஜித்துக்கு "பத்மபூஷண்" விருது வழங்கப்பட்டதும் இதுபோன்ற ஒரு அரசியல் கணக்கே. திரைப்படங்களில் "லவ்வர்" போன்ற படங்கள் உறவுகளிலுள்ள நச்சுத்தன்மை குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. "அமரன்" படத்தில் நடிகை சாய் பல்லவி சிறப்பாக நடித்திருந்தும் அவருக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. இங்கு தகுதியான கலைஞர்களுக்கு உரிய நேரத்தில் விருதுகள் வழங்கப்படுவதில்லை. ரஜினிகாந்தின் அனுபவத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது போன்ற உயரிய அங்கீகாரங்கள் உரிய காலத்தில் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. இந்தியாவில் கலைஞர்கள் உயிருடன் இருக்கும்போது அங்கீகரிக்காமல், மறைந்த பிறகோ அல்லது வயதான பிறகோ தாமதமாக விருது வழங்கும் போக்கே உள்ளது. சிவாஜி கணேசனுக்கு தாதாசாகேப் பால்கே விருது மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டது. பாடகி எஸ்.ஜானகி போன்றோர் விருதுகளை நிராகரித்ததற்கு இந்தத் தாமதமே முக்கியக் காரணம். விருதின் மதிப்பு குறையக்கூடாது என்பதற்காக தன்னுடைய 5வது தேசிய விருதை பெற்றபோது, "இனி எனக்கு விருது வேண்டாம், வளரும் புதிய கலைஞர்களுக்கு வழங்குங்கள்" என்று சொன்னவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். ஆனால், இப்போது வழங்கப்படும் தேசிய விருதுகளின் தேர்வில் முழுமையான அரசியலே நிறைந்துள்ளது." என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.தேசிய விருது அரசியல்
தனுஷ் ராயன் படம்
இட்லி கடைக்கு விருது
விருதுகள் புறக்கணிப்பு ஏன்
கே.ஜே,யேசுதாஸ்